110 பேரை மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வைத்த மதுரை பெண்…!

Read Time:4 Minute, 49 Second

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சேவை அடிப்படையில் 450 வீடுகளில் தன்னார்வமாக ஆய்வுகளை மேற்கொண்டு, மழைநீர் சேமிப்பினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு 110 பேரை மழைநீர் சேகரிப்பு அமைக்க வைத்துள்ளார் ஜாய் மோகன். அவருடைய பணியை மாநகராட்சியும், மக்களும் பாராட்டி வருகிறார்கள்.

மழைநீர் சேகரிப்பினால் கிடைக்கும் நன்மைகள் ஆயிரம் இருப்பினும் அதனை முறையாக செயல்படுத்தாத நிலை இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

கோடையில் மழைநீரின் தேவையை புரியும் மக்கள் மழைகாலங்களில் அதனை சேகரிக்க போதிய நடவடிக்கை எடுக்காத நிலை இன்றும் நிலவுகிறது. இந்நிலையில் பெண் ஒருவர் மதுரையில்
110 பேரை மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வைத்துள்ளார்.


மதுரை மாநகராட்சியில் 60 சதவீதம் கட்டிடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறது. மீதி கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்தும், பொதுமக்கள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தினால் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. கோடை போனதும், மழையும் ஒரளவு பெய்துவிட்டதால் மக்களிடம் மழைநீர் சேகரிப்பு அமைக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.


இந்நிலையில் 22-வது வார்டில் பாஸ்டியன் நகரில் வசிக்கும் ஜாய் மோகன் என்ற பெண், தன்னார்வமாக சேவை மனப்பான்மையில் ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து சர்வே செய்கிறார். இதுவரை 520 வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். மழைநீர் சேகரிப்பு இருந்து பயன்படுத்தாவிட்டால் அவர்களை பயன்படுத்த வைக்கவும், அமைக்காத வீடுகளில் அமைக்க வைக்கவும் மழைநீர் சேகரிப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு செய்தார்.


அவருடைய முயற்சிக்கு பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஆய்வு செய்த வீடுகளில் 110 பேரை மழைநீர் சேகரிப்பு அமைக்க வைத்து உள்ளார்.

இவரது சேவையை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நேரில் அழைத்து பாராட்டினார். அவருடைய சேவையை ஊக்கப்படுத்தி, அவரை தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு சேகரிக்க வைக்கவும், மழைநீர் சேகரிப்பு அமைக்காத வீடுகளில் அவர் மூலம் மாநகராட்சியின் விழிப்புணர்வு ‘நோட்டீஸ்’ வழங்கும் கவுரவத்தை வழங்கி உள்ளார்.


என்னோட வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பில் கிடைக்கும் தண்ணீரைதான் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகிறேன். கடந்த ஆண்டு அக்கம், பக்கத்தினர் அனைவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்தபோது நான் மட்டும் சேமித்து வைத்த தண்ணீரை தாராளமாக பயன்படுத்தினேன். என்னோட தேவைக்கு போக மீதி தண்ணீரை மற்றவர்களுக்கு கொடுத்தேன். நான் பெற்ற இந்த பயனை, மற்றவர்களையும் பெற வைக்க வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு செய்கிறேன்.

என்று கூறியுள்ளார் ஜாய் மோகன்.


ஜாய் மோகன் அவர்களின் கணவர் இந்தியன் வங்கி மானேஜராக இருந்தார். அவர் இறந்துவிட்டார். ஒரு மகனும் திருமணம் செய்து சென்னையில் உள்ளார். என்னோட அன்றாட வாழ்க்கைக்கு போதுமான வசதி உள்ளது. அதனால், என்னோட வாழ்க்கையில் மீதமுள்ள நாட்களை சமூகத்திற்காக செலவிடவே இந்த சேவையில் ஈடுபடுகிறேன் என்று தன்னுடைய பணியை செய்து வருகிறார் ஜாய் மோகன்.

அதுபோக தன்னுடைய சகோதரர் உதவியுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தமுடியாத கஷ்டப்படுகிற குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். அவருடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துவோம்.