ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு…!

Read Time:8 Minute, 36 Second

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் ஜெயவீர அனுமன் சிவபெருமானின் அவதாரமாக தோன்றியவர். ராமாவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு, அனைத்து ஜீவராசிகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதைப் பார்த்த சிவபெருமான், தன் பங்குக்கும் ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச் சென்று ஒரு பெண்ணிடம் தருமாறு வாயுதேவனை பணித்தார். அந்த நேரத்தில் தான் அஞ்சனை தனக்கு பார் போற்றும் மைந்தன் வேண்டும் என்று இறைவனை நினைத்து தவம் செய்தாள். அவளிடம் அந்த சக்தியைச் சேர்த்தார் வாயுதேவன். அதன்படி சிவபெருமானின் சக்தியாக அவ தரித்தவரே ஆஞ்சநேயர் என்ற கூற்று ஒன்று உள்ளது.

மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன்- கிருஷ்ணனின் நட்பைப் போன்றது, ராமாயணத்தில் வரும் அனுமன்- ராமரின் நட்பு. பல பெருமைகளை கொண்ட அனுமனை, மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அதனால் இவரை மகாவிஷ்ணுவின் சிறிய திருவடியாக கூறுவர். அதே சமயம் கருடாழ்வாருக்கு கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்கு கிடைத்தது. அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக் கோவில்கள் அனுமனுக்கு பல அமைந்திருக்கின்றன.

அனுமன் வழிபாடும், அவருக்கு தனி கோவில்கள் எழுப்புவதும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்து தொடங்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அனுமனுக்கான ஆலயங்களில் வீரக் கோலம், நின்றகோலம், யோகக் கோலம் என மூன்று நிலைகளில் அனுமன் அருள்பாலிப்பார். அனுமன் ‘சிரஞ்சீவி’ என்ற பட்டத்தைக் கொண்ட எழுவரில் ஒருவர்.

அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. அனுமன் வழிபாட்டினால் அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடல் மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சைப்பழ மாலை, துளசி மாலை சாத்தி வழிபட்டால் மேன்மை பெறுவார்கள்.


ஸ்ரீராமரிடம் அனுமன் கொண்ட பக்தி… செந்தூரம் பூசுவது ஏன்?


வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நம் துன்பங்கள் அனைத்தும் வெப்பம் பட்ட வெண்ணெய் போல கரைந்து போகும் என்பது நம்பிக்கை. அன்பு, தொண்டு, வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஞ்சநேயர், சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். ராமநாமத்தின் உயிர் உருவமான ஆஞ்சநேயர் எந்தவிதமான பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும் பக்தியுடனும் ராமனுக்கு பணிவிடை செய்தார். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வீரம், ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது பிறந்த தினம், அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இன்று அனுமன் ஜெயந்தியாகும், இந்நாளில் அவரை வழிப்பட்டு நற்பலன்களை பெறுவோம்.

வாலின் சக்தியை இலங்கையில் காண்பித்தவர் அனுமன். அவரது வாலில் கீழிருந்து மேலாக பொட்டு வைத்தால் தான் வெற்றிகிட்டும். ஒருமுறை ராமபிரானுக்கே, அனுமன் தனது வாலை சுற்றி வைத்து கோட்டை போல எழுப்பி, பாதுபாப்பு அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமனின் பலம் அனைத்தும் வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும்.

வெண்ணெய் வழிபாடு

வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்காலத்திலே வீர அனுமான் பாறைகளையும், மலைகளையும், பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.

நவக்கிரக தோஷம் போக்கும் அனுமன்

அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளன. அதனால் நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை வழிபட்டால் பலன் கிடைக்கும். மாதந்தோறும் மூலநட்சத்திரத்திலும், அமாவாசை திதியிலும் வழிபட்டு பலன் பெறலாம். வெற்றிலைமாலை, துளசி மாலை, வடைமாலை, எலுமிச்சை மாலை ஆகியன சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் பனிபோல் விலகும்.

வடைமாலை சாத்துவது ஏன்?

அனுமனுக்கு வடைமாலை சாத்தி வழிபடுவதை பார்த்து இருக்கிறோம். போர்க்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும் தமது உடல் வலிமையால் வடைதட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தைச்சேர்த்து அவருக்கு வடை மாலையாக கோர்த்து அணிவிக்கின்றனர்.

சீதாதேவி பரிசாக வழங்கிய முத்துமாலையை சுவைத்து அதில் ராமசுகம் இருக்கிறதா? என்று பார்த்து பிய்த்து எறிந்தவர்அனுமன். அது போலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.

வெற்றிலை மாலை

இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்றபோது அரக்கர்களை பந்தாடி போர்க்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமன். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். இலங்கையில் அசோகவனத்தில் சீதாபிராட்டியார் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தபோது ராமதூதனாக சென்ற அனுமன், சீதையை சந்தித்து ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டு செல்வார் என்று கூறினார். இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து வெற்றிலையைப்பறித்து அனுமனின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயென்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவு கூரும் வகையில் வாழ்க்கையில்வெற்றி பெற வேண்டி அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

நாம் ஆஞ்சநேயரை அறிந்து கொள்வோம். வாயுவின் புத்திரனான அவர் மீது தியானம் செய்வோம். அனுமன் என்னும் பெயர் கொண்ட அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள். இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர். கவலைகள் அகலும். நன்மை பிறக்கும்.