தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) பற்றி தெரிந்துக்கொள்வோம்…

Read Time:8 Minute, 4 Second

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் என்பிஆர் என்றால் என்ன? இது என்.ஆர்.சி. உடன் தொடர்புடையதா? இது மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து வேற்பட்டதா? என்ற கேள்விகளுக்கான இந்த பதிவில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பிக்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. என்பிஆர் புதுப்பிக்க ரூ .3,941 கோடியும் செலவிட உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது, இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் தொகை பதிவு என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்கள் பட்டியலாகும். கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும் பெறப்பட்டது. அதன்பின், 2015-ல் வீடு வீடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. இப்பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் பணியும் முடிவடைந்தது. ஆதார் உடன் இணைக்கப்பட்டது.

தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு (என்ஆர்சி) நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவு தொடர்பான தகவல்கள் மக்களை முற்றிலும் குழப்பத்திற்கு தள்ளியுள்ளது. குறிப்பிட்டு சொல்லப்போனால் சென்சஸ் என்று சொல்லப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், என்.பி.ஆர். எனபடும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் அதிகமான வேறுபாடுகள் உள்ளது. இதுதொடர்பாக நீங்கள் அதிகம் குழம்ப வேண்டாம்.


சென்சஸ்:- இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மக்களிடம் பல்வேறு வகையான புள்ளிவிவரங்கள் கேட்கப்பட்டு பொருளாதார விவகாரங்களுக்காகவும், அரசின் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.


என்பிஆர்:- என்.பி.ஆர். எனபடும் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்கள் பட்டியல் மட்டுமே. கடந்த 2010-ம் ஆண்டே தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும் பெறப்பட்டது. பின்னர் 2015-ம் ஆண்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டது.


என்ஆர்சி:- அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர் வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பதற்கான தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இது பல்வேறு குளறுபடிகளுடன் அப்படியே இருக்கிறது. இதனை பிற மாநிலங்களில் அமல்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. சொல்லப்போனால் மூன்றும் வெவ்வேறானது என்பதை தெளிவாக்கி கொள்ளலாம்.


என்ஆர்பி

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்வது கட்டாயமாகும். இதில், இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் இருவரும் இடம்பெறுவார்கள். குடியுரிமை சட்டம் 1955-ன் மற்றும் குடியுரிமை விதிகள் 2003-ன் கீழும் கிராமம், துணை நகரம், துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் மக்கள் தொகை பதிவேடு குறித்து கணக்கெடுப்பும், அடையாள அட்டையும் வழங்கும் பணிகள் நடைபெறும்.

ஒரு நபர் ஆறு மாதம் அல்லது அதற்கு மேல் வசித்து வரும் இடம், அடுத்த 6 மாதம் அல்லது அதற்கு மேல் அங்கு தங்கியிருப்பவராக இருந்தால் அவர் வழக்கமான குடியிருப்பாளராக வரையறுக்கப்படுகிறார். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் பதிவுசெய்து தேசிய அடையாள அட்டையை வழங்க சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், மற்றும் தலைமை பதிவாளர் தலைமையின் கீழ் நடைபெறும்.

என்பிஆர்-ல் சேகரிக்கப்படும் தகவல்கள் என்ன?

நாட்டில் உள்ள ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரின் விரிவான அடையாள தரவுத்தளத்தை உருவாக்குவதே என்ஆர்பி நோக்கம். தரவுத்தளத்தில் இதுபோன்ற புள்ளிவிவர விவரங்கள் இருக்கும்:-
பெயர், குடும்பத்தலைவர், தந்தையின் பெயர், தாயார் பெயர், மனைவியின் பெயர், பாலினம், பிறந்த தேதி, திருமணம் விபரம், பிறந்த இடம், தேசியம், வசிப்பிடத்தின் தற்போதைய முகவரி, தற்போதைய முகவரியில் தங்கியிருக்கும் காலம், நிரந்தர குடியிருப்பு முகவரி, தொழில், கல்வி தகுதி.

என்பிஆர்-க்காக நீங்கள் வழங்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

என்பிஆர்-யின் போது பதிலளிப்பவர் எந்த ஆவணத்தையும் வழங்க வேண்டிய தேவையில்லை. செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்து பேசுகையில், என்.பி.ஆர். தகவல்கள் சுயசான்றளிக்கப்படுவவையாகும். அதாவது பதிலளித்தவர் (கணக்கெடுக்க வருபவர்களிடம் தகவல் வழங்குபவர்) வழங்கிய எந்ததகவலும் சரியானதாக கருதப்படும், மேலும் ஆவணங்கள் அல்லது பயோமெட்ரிக் தேவையில்லை என்றார்.

என்பிஆர் கணக்கு எப்போது மேற்கொள்ளப்படுகிறது?

தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பு 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெற உள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்ட் மாதமே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அசாம் தவிர, இந்தியா முழுவதும் என்.பி.ஆர் நடத்தப்படும். அசாம் மாநிலம் ஏற்கனவே குடிமக்களின் தேசிய பதிவு முறையை எதிர்க்கொண்டுள்ளது.

சென்சஸ்சிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

1948-ம் ஆண்டு சென்சஸ் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்போது என்ஆர்பியும் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஒரேநேரத்தில் தொடங்கினாலும், இரண்டு தரவுத்தளங்களும் ஒரே மாதிரியானது கிடையாது. சென்சஸ் என்று சொல்லப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளது.

என்ஆர்சியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

என்ஆர்பி என்பது என்ஆர்சியிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது. என்ஆர்பி என்ப்படும் தேசிய மக்கள்தொகை பதிவு என்பது இந்தியாவில் வாழும் மக்கள் தொடர்பானது. அவர்கள் குடிமக்களா? இல்லையா? என்பது பற்றியது கிடையாது. ஆனால் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்திய குடிமக்களை மட்டும் கொண்ட பதவிவேடாகும். மூன்றும் முற்றிலும் மாறுப்பட்டது.