”மிகவும் வரவேற்கிறோம்… மகிழுங்கள்…” மீம்களுக்கு பிரதமர் மோடி பதில்

Read Time:3 Minute, 23 Second

சூரியன், நிலவு (சந்திரன்) மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் நிலவு (சந்திரன்) சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைத்துவிடும்.

அந்தவகையில் இன்று (டிசம்பர் 26) காலை சூரிய கிரகணம் நிகழ்ந்தது. காலை 8.08 மணி அளவில் தொடங்கி 11.19 மணி வரை நீடித்தது. சரியாக 9.35 மணி அளவில் சூரியனை, நிலவு முழுமையாக மறைத்தது. இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலை பெற்றது. அதற்கு பிறகு நிலவு, சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைத்தது. அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றியது.

சென்னை, மதுரை உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

மேக மூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால்தான் காணலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே, மேக மூட்டம் காணப்பட்ட பகுதிகளில் இந்நிகழ்வை பார்க்கமுடியவில்லை.


பிரதமர் மோடியும் சூரிய கிரணத்தை பார்க்க முயற்சித்துள்ளார். ஆனால், முடியவில்லை. இதுதொடர்பான தகவலை டுவிட்டரில் பதிவிட்டார். அதில், “இந்தியர்கள் பலரைப் போல மேகமூட்டத்தால் என்னால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை. ஆனால், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் தெரிந்த நெருப்புவளைய சூரியகிரகணத்தை நேரலையில் பார்த்தேன். மேலும், நிபுணர்களுடன் உரையாடி சூரிய கிரகணத்தை பற்றி தெரிந்து கொண்டேன்,” என குறிப்பிட்டார்.


மேலும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணாடியில் பார்க்கும் புகைப்படத்துடன் மூன்று புகைப்படங்களை மோடி பதிவிட்டிருந்தார்.இதனையடுத்து Gappistan Radio என்ற டுவிட்டர் பக்கம், மோடி கண்ணாடி அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ”உங்கள் புகைப்படம் மீம் ஆக மாறி வருகிறது” என்று பதிவிட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ”மிகவும் வரவேற்கிறோம் …. மகிழுங்கள்” என்று பதிலளித்தார். இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கூலஸ்ட் பிரதமர் என்று பதிவிட்டு வருகின்றனர்.


இன்று ஏற்பட்ட சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்ற சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே 16-ந்தேதிதான் நிகழும்.