பிளாஸ்டிக் ஸ்டிராவுக்கு பதில் காட்டு புற்களில் இருந்து ‘ஸ்டிரா’ உருவாக்குகிறார் இந்த தொழில்முனைவோர்…!

Read Time:4 Minute, 10 Second

வியட்நாமிய தொழில்முனைவோர் டிரான் மின் டையின்(Tran Minh Tien) காட்டு புற்களின் தண்டுகளை பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மக்கும் தன்மை கொண்ட ஸ்டிராக்களை உருவாக்குகிறார். இதனால் பானங்களை பருகுவதற்கான சுற்றுச்சூழல் நட்பு வழியை ஊக்குவிக்க முடியும் என்ற நம்பிக்கையை உண்மையாக்கி வருகிறார்.

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீங்கு தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், அதனை தவிர்க்கும் நடவடிக்கையில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஆனால், இதுபோதுமா என்றால் கண்டிப்பாக கிடையாது. உலகம் முழுவதும் கடல், ஆறுகளில் பிளாஸ்டிக் மிதக்கிறது, மண்ணுக்குள் புதைந்து மக்காமல் இருக்கிறது. இவையனைத்தும் விஷம்தான். பிளாஸ்டிக் எல்லா வடிவங்களிலும் ஒழிக்கப்பட வேண்டியது.

எளிதாக குடித்துவிடும் பானங்களை குடிக்க கூட பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்தி வருகிறோம். இவைகளும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்ட போது, ஸ்டிராவுக்கு பதில் பப்பாளி இலைத்தண்டு சில இடங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இதுகால போக்கில் மாறிவிட்டது. மீண்டும் இளநீர் வியாபாரிகள், பழஜூஸ் வியாபாரிகள் கையில் பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் வரத்தொடங்கிவிட்டது.

இந்நிலையில் வியட்நாமிய தொழில்முனைவோர் டிரான் மின் டையின் காட்டு புற்களின் தண்டுகளை பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மக்கும் தன்மை கொண்ட ஸ்டிராக்களை உருவாக்கி வருகிறார்.

வியட்நாமின் லாங் ஆன் மாகாணத்தில் ஒரு வயலில் காட்டு புல்களை சேகரிக்கிறார் டிரான் மின் டையின். காட்டு சாம்பல் சேறு புல் வளரும் சதுப்பு நிலத்தில் ஒரு கிராமத்திலிருந்து தனது நிறுவனமான 3T-ஐ நடத்துகிறார்.
அவருக்கு இந்த புற்களை ஸ்டிராவாக உருவாக்குவது ஒரு உழைப்பு மிகுந்த நடவடிக்கையாக இருக்கிறது. இதற்காக காடுகளிலிருந்து புற்களை சேகரிக்கிறார். பின்னர் சீரான நீளமாக வெட்டி, கயவைக்கிறார். புல்லுக்கு நடுவே குழாய் சீராக இருக்கவும் சுத்தம் செய்கிறார். இதற்காக சிலரை பணியில் அமர்த்தியுள்ளார். தேவை அதிகரித்துள்ளதால், தனது செயல்பாட்டை எவ்வளவு விரைவாக விரிவுபடுத்த முடியும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்கிறார் டிரான் மின் டையின்.

டையின் தனது தொழிலை 2017-ல் தொடங்கினார். இப்போது அவரது நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் 3,000 ஸ்டிராக்களை உற்பத்தி செய்கிறது. இதனால் மாதத்திற்கு 400 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 28,500) லாபம் அவருக்கு கிடைக்கிறது. இந்த ஸ்டிராக்களை சுமார் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு உலகின் நான்காவது பெரிய பங்களிப்பை கொண்டிருப்பது வியட்நாம். அந்நாட்டில் புற்களில் ஸ்டிராக்களை உருவாக்கும் டையின் பேசுகையில், “குறைந்த அளவிலான விநியோகத்தால் என்னுடைய தயாரிப்பு ஸ்டிராக்கள் மடுட்ம் ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது என்பது எனக்கும் தெரியும்,” என்று கூறி பணியை மேற்கொள்கிறார்.