என்பிஆர் விவகாரம் ப.சிதம்பரத்திற்கு பா.ஜனதா பதிலடி

Read Time:7 Minute, 20 Second

தேசிய மக்கள்தொகை பதிவு என்றால் என்ன? (NPR) என்பது தொடர்பாக குழப்பங்கள் தொடர்கிறது. இதில் குழப்பம் அடைய தேவையில்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரின் விரிவான அடையாள தரவுத்தளத்தை உருவாக்குவதே இதனுடைய நோக்கமாகும். இதில், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் பெயரும் இடம்பெறும். இதனை, என்.ஆர்.சி. (NRC) எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் ஒப்பிட வேண்டாம் என மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. என்.ஆர்.சி. என்பது இந்தியாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டுபிடிக்க தயாரிக்கப்படுவது. இதில் வெளிநாட்டவர்கள் பெயர் இடம்பெறாது.

ஆனால், என்.ஆர்.சி.க்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால் என்.பி.ஆர். என்ற பெயரில் தன்னுடைய செயல்திட்டத்தை பா.ஜனதா நிறைவேற்ற உள்ளது என விமர்சனங்களும், சந்தேகங்களும் எழுந்துள்ளது. இதனால், மேற்கு வங்காளம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் என்.பி.ஆர்.ஐ எதிர்க்கின்றன. தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளன. ஆனால், அமித்ஷா என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யுடன் இணைப்படாது என விளக்கம் அளித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் வெடித்துள்ளது.

என்பிஆர் என்பது 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதுதான் கொண்டு வரப்பட்டது என்றும் பா.ஜனதா தெரிவித்தது.

பா.சிதம்பரத்தின் முந்தைய வீடியோ, அவருடைய பதில்களுக்கு பா.ஜனதாவும் பதிலடி கொடுத்துள்ளது. அதுதொடர்பான விபரங்கள்:-


2008 நவம்பர் 26-ல் மும்பை தாக்குதலுக்கு பின்னர் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ப. சிதம்பரம் இந்தியாவில் இருக்கும் குடியிருப்பாளர்களின் தேசிய தரவுத்தளத்தை உருவாக்க முயற்சித்தார். 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இதற்கான(NPR) தரவுகள் சேகரிக்கப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பி.சிதம்பரம் என்பிஆர் பற்றி பேசும் வீடியோவை, பா.ஜனதாவின் அமித் மால்வியா டுவிட்டரில் வெளியிட்டார்.

சிதம்பரம் அந்த வீடியோவில் பேசுகையில், “மனித வரலாற்றில் முதல்முறையாக 120 கோடி மக்களை அடையாளம் காணவும், எண்ணவும், கணக்கிடவும், பதிவு செய்யவும், இறுதியில் அடையாள அட்டையை வழங்குவதற்குமான பணியை தொடங்குகிறோம். இந்த மாதிரியான ஒருசெயல் உலகில் வேறு எங்கும் முயற்சிக்கப்படவில்லை,” என்று கூறுகிறார்.


இதற்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில் தகவல் வெளியிட்ட ப.சிதம்பரம், கடந்த 2010-ம் ஆண்டு என்பிஆர் திட்டம் வெளியிடப்பட்ட வீடியோவை பா.ஜனதா வெளியிட்டதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த வீடியோவை தயவு கூர்ந்து கேளுங்கள். நாங்கள் நாட்டில் உள்ள மக்களைத்தான் கணக்கிடுகிறோம், குடியுரிமையை வலியுறுத்தவில்லை என்றார்.

வீடியோவில் என்.ஆர்.சி. தொடர்பாக எதவும் பேசவில்லை என குறிப்பிட்ட ப.சிதம்பரம், மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு பரந்த, அதிகமான தீங்கான நோக்கம் இருக்கிறது. 2010-தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது ஆபத்தானது. 2010 என்பிஆர் உள்ள விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு நடைமுறைப்படுத்துவதும் முற்றிலும் வேறுபாடானது. பா.ஜனதாவின் நோக்கங்களுக்கு நற்சான்று அளிக்க வேண்டுமெனில், அரசு எந்தவிதமான நிபந்தனையும் இன்றி 2010 என்பிஆர் முறைக்கும், வடிவமைப்புக்கும் ஆதரவு அளித்து, சர்ச்சைக்குரிய என்ஆர்சியுடன் இணைக்கும் திட்டம் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும் என டுவிட்டரில் வரிசையான பதில்களில் குறிப்பிட்டார்.


ப.சிதம்பரம் இவ்வாறு பதில் அளிக்கையில் அமித் மால்வியா, காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அப்போது 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை இணை அமைச்சராக இருந்த ஜிதேந்தர் சிங் பதில் அளிக்கையில், என்.ஆர்.சி எவ்வாறு என்.ஆர்.சி.க்கு முதல் படியாகும் என்பதை விவரித்தார் என்று ஆவணங்களை வெளிட்டது என ஆவணங்களை வெளியிட்டார் அமித் மால்வியா.


பா.ஜனதா கட்சியின் சமூக வலைதளங்களை கையாள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமித் மால்வியா, மற்றொரு வீடியோவை வெளியிட்டார். 2012-ம் ஆண்டு சிதம்பரம் பேசியது என ஒரு வீடியோவை வெளியிட்டார். “சிதம்பரம் உங்களுக்கு மறந்துவிட்டது. இங்கே கொஞ்சம் உதவுகிறேன்…” என அவர் வெளியிட்ட வீடியோவில் “என்.பி.ஆர் செயல்முறை என்பது குடியிருப்பாளர்கள் அட்டையை வழங்குவதற்காகவே, இது இறுதியில் குடியுரிமை அட்டைக்கு வழிவகுக்கும்,” என சிதம்பரம் பேசுகிறார்.


அமித் மால்வியா தொடர்ந்து குறிப்பிடுகையில் என்.பி.ஆர்.ஐ குடியுரிமையிலிருந்து விலக்கியது பா.ஜனதா கூட்டணி அரசு என்று குறிப்பிட்டார்.


குடியுரிமைச் சட்டத்தின் 2004 திருத்தத்தின் கீழ் தேசிய மக்கள் தொகை பதிவு அல்லது என்.பி.ஆர். பதிவை மேர்கொள்ள அதிகாரங்களை அரசாங்கம் பெறுகிறது. வாஜ்பாய் அரசாங்கத்தால் 2004 டிசம்பரில் சட்டத்தில் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவு 14 ஏ “இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் கட்டாயமாக பதிவுசெய்து அவருக்கு தேசிய அடையாள அட்டையை வழங்க” மத்திய அரசுக்கு அளிக்கிறது. குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதற்கான முதல் படியாக மக்கள் தொகை பதிவு உள்ளது. குடியுரிமை (குடிமக்களின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) விதிகள், 2003 இன் கீழ், மக்கள் எந்த நேரத்திலும் ஆதாரங்களை சமர்பிக்ககூறி மக்கள் தொகை பதிவேட்டை குடியுரிமை பதிவேட்டில் மேம்படுத்த முடிவு செய்யலாம்.