இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது தவறான குற்றம்சுமத்தப்பட்டதற்காக, அவருக்கு ரூ. 1. 3 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் திறம்பட செயல்பட்டவா் விஞ்ஞானி நம்பி நாராயணன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடா்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கடந்த 1994-ம் ஆண்டில் கேரள காவல் துறையினரால் அவா் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு தொடா்பாக முதலில் கேரள காவல்துறை விசாரணை நடத்தியது. பின்னா் வழக்கு விசாரணை சிபிஐ அமைப்புக்கு மாற்றப்பட்டது. நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என சிபிஐ அறிவித்தது. உச்சநீதிமன்றமும் இதை உறுதிசெய்தது. அதையடுத்து, இரண்டு மாத சிறைவாசத்துக்கு பின் நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டாா்.
இதனையடுத்து தன்னை கைது செய்த கேரள காவல் துறை மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள உயா்நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடா்ந்தாா். அதற்கு உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்றம் சென்ரார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவுப்படி ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
இதனிடையே தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டினால் தனது பணி வாழ்க்கை மோசமடைந்ததாகவும், சிறையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் நம்பி நாராயணன் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நம்பி நாராயணனுடன் சுமூகமாக தீா்வு காணுமாறு முன்னாள் தலைமை செயலா் கே. ஜெயகுமாரை கேரள அரசு நியமித்தது. அவா் அளித்த பரிந்துரையின்படி, இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக நம்பி நாராயணனுக்கு ரூ. 1.3 கோடி இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் தீா்வு ஒப்பந்தம் சமா்ப்பித்து வழக்கை முடிக்கவிருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக ரூ. 1.3 கோடி வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கு குறித்து ‘Orbit of memories’ என்கிற தன் சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார் விஞ்ஞானி நம்பி நாராயணன். அதில் இந்தியா கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்கு தடை ஏற்படுத்த முனைப்பு காட்டியது. இதனால், சி.ஐ.ஏ-வை ஏவிவிட்டது. அடுத்தவர்களை அழிப்பதில் வல்லமை படைத்த சி.ஐ.ஏ தனக்கு மசிந்த இந்திய போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோடித்து என்னை கைது செய்ய வைத்தது என தெரிவித்துள்ளார்.
1992-ம் ஆண்டு கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பம் பெறுவது தொடர்பாக இந்தியாவும், ரஷ்யாவும் கையொப்பமிட்டன. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் இந்தியாவுக்கு கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை தரக்கூடாது என்று ரஷ்யாவுக்கு நிர்பந்தித்தன. நெருக்கடி காரணமாக ரஷ்யா ஒப்பந்தத்தை ரத்து செய்தது. புதிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அதன்படி, கிரயோஜெனிக் இன்ஜின்களின் 4 மாதிரிகள் மட்டுமே இந்தியாவுக்கு தந்தது. தொழில்நுட்பம் தரப்படவில்லை.
கிரயோஜெனிக் இன்ஜினுக்கான திரவ எரிபொருள் கண்டுபிடிப்பதுதான் சவால் நிறைந்தது. இந்தப் பணிக்குத்தான் விஞ்ஞானி நம்பி நாராயணன் பொறுப்பேற்று இருந்தார். இதே தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்கினார் என்பதுதான் நம்பி நாராயணன் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. தன் அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் சி.ஐ.ஏ. சதிக்கு பலிக்கடா ஆகிப் போனார் நம்பி நாராயணன். இந்தியாவும் திறமைமிக்க விஞ்ஞானியை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது.