கஜகஸ்தானில் 100 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள் சிக்கியது, இதுவரையில் தெரிந்தவை:-

Read Time:2 Minute, 38 Second

கஜகஸ்தானில் 100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானம் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணம் தெரியவரவில்லை.

ஆனால், விபத்து நேரிட்டப்பகுதியில் அதிகமாக பனிமூட்டம் காணப்பட்டது என விபத்து நடந்தப்பகுதியிலிருந்து செய்தி கூறிய ராய்டர்ஸ் செய்தியாளர் கூறியுள்ளார்.


கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இருந்து இன்று (டிசம்பர் 27) காலை 7.22 மணிக்கு பெக் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட் விமானம் 95 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றது.


புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அல்மாட்டியின் புறகநரில் இருக்கும் 2 அடுக்குமாடிக்கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் நொறுங்கியது. நல்ல வேளையாக விமானம் தீப்பிடிக்க வில்லை. உடனடியாக மீட்பு படையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர்.


காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என கஜகஸ்தான் தொழில்துறை மற்றும் கட்டமைப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்தையடுத்து அல்மாட்டி விமானநிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பெக் ஏர் விமான நிறுவனமும் தனது சேவையை ரத்து செய்துள்ளது.


விமான விபத்துக்கான காரணம் தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை கஜகஸ்தான் அரசு அமைத்துள்ளது.


பெக் ஏர் நிறுவனம் 1999 -ல் நிறுவப்பட்டது என்று நிறுவனத்தின் வலைத்தளம் கூறுகிறது. ஆரம்பத்தில் விஐபி விமான நடவடிக்கைகளை குறிவைத்து செயல்பட்டுள்ளது. இப்போது, இந்நிறுவனம் கஜகஸ்தானின் முதல் குறைந்த கட்டண விமான நிறுவனமாக பார்க்கப்படுகிறது. நடுத்தர அளவிலான இரட்டை-டர்போபன் விமானம் முக்கியமாக குறுகிய தூர விமானங்களுக்காக வடிவமைக்கப்பட்டது.