பாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்…

Read Time:7 Minute, 22 Second

சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த காப்பான் திரைப்படத்தில் வெட்டுக்கிளிகளால் ஏற்படும் சேதம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, பாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம் ஆகிவருகிறது.

காப்பான் திரைப்படத்தில் வெட்டுக்கிளியின் ஒருவகையான பாலைவன வெட்டுக்கிளி பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தது. உண்மையில் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. அனைவரும் இதுதொடர்பாக அச்சத்துடன் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதில் கூகுளில் பதில் தேடியவர்களும் அதிகம். இதில் உண்மை என்னவென்றால் காப்பான் படத்தில் காட்டப்பட்டது, சொல்லியது வெறும் முன்னோட்டம் மட்டும்தான். அதைவிட மோசமானவை மற்றும் கொடூரமானவைதான் இந்த வெட்டுக்கிளிகள். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் இப்போதும் இருந்துதான் வருகிறது. இவைகள் இந்த பக்கமும் அந்த பக்கமும் பாய்ந்து பாய்ந்து தாக்கிக் கொண்டிருக்கின்றன.

வெட்டுக்கிளிகலால் கடுமையான பயிர் சேதம் ஏற்படும். இதை கட்டுப்படுத்து வதற்காக இரு நாட்டு அரசாங்கமும் இணைந்து கண்காணிப்பு நிலையங்களை அமைத்திருக்கின்றன. தற்போது, பாகிஸ்தான் எல்லை மாநிலங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வெட்டுக்கிளி படையெடுப்பால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமாகி வருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் 11 குழுக்கள் குஜராத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழிக்கும் காட்சி ரசிகர்களை பதற வைக்கும். அதேபோன்று குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வயல்கள், தோட்டங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழித்து வருகின்றன. பெரும்பாலும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக பறந்து வந்து பயிர்களை நாசப்படுத்தும். ஆனால் தற்போது டிசம்பர் வரையில் இதனுடைய தாக்கம் இருக்கிறது என விவசாயிகள் கவலையை தெரிவிக்கின்றனர்.

வெட்டுக் கிளிகள் ஆப்பிரிக்காவில் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. அவை நாளொன்றுக்கு 150 முதல் 200 கி.மீ. வரை பறந்து ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன், ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைகின்றன. வரும் வழியெல்லாம் இனப்பெருக்கம் செய்யும் வெட்டுக்கிளிகள் பயிர்களைநாசம் செய்கின்றன. மக்களுக்கு பெரும் இடையூறுகளை செய்கின்றன. தற்போது பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை சூறையாடி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பாலைவனப்பகுதியில் இருந்து வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளது.

குஜராத்தின் வடக்கு மாவட்டங்களான பனாஸ்கந்தா, பதான், கட்ச் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கடுகு, சீரகம், பெருஞ்சீரகம், ஆமணக்கு, காட்டாமணக்கு, உருளைக்கிழங்கு, பருத்தி, கோதுமை பயிர்களை வெட்டுக்கிளிகள் அழித்துள்ளன. இதேபோன்று அதன் அண்டைய மாநிலமான ராஜஸ்தானின் 9 மாவட்டங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் இதுதொடர்பாக பேசுகையில், வழக்கமாக அக்டோபர் மாதத்துடன் வெட்டுக் கிளி தொல்லை ஒழிந்துவிடும். ஆனால், இப்போது டிசம்பர் மாதம் வரை வெட்டுக்கிளி பிரச்சினை நீடிக்கிறது. பாகிஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் இருந்து ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பறந்து வருகின்றன. அவைகள் வரும்போது வானமே இருண்டு விடுகிறது. கடந்த 1994-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என் கிறனர்.

மத்திய வேளாண்துறை சார்பில் குஜராத்துக்கு 11 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆய்வை மேற்கொள்கிறது.

வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுவதாகவும் மாநில விவசாயத்துறை அமைச்சர் ஆர் சி பால்டு தெரிவித்துள்ளார். வயல்களில் டயர்களை எரித்தல், டிரம்ஸ் வாசித்தல், சத்தம் எழுப்பும் உபகரணங்களை பயன்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள விவசாயிகளிடம் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு வெட்டுக்கிளிகள் திரளாக வந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றன.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி “ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்து வெட்டுக்கிளிகளை அழிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார். இருப்பினும், திறந்தவெளிகளில் புல் மற்றும் பிற தாவரங்களை உண்ணும் விலங்குகளுக்கு இதுபோன்ற ஒருமுறை ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் சுமார் 23 நாடுகளில் வெட்டுக்கிளி பிரச்சினை உள்ளன. முதல்முறையாக இத்தாலியிலும் வெட்டுக்கிளி பிரச்சினை தலையெடுத்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச நாடுகள் ஆய்வு செய்வது அவசியம்” என்று தெரிவிக்கின்றனர் சர்வதேச உயிரியல் ஆய்வாளர்கள்.