குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்: நார்வே பெண் வெளியேற மத்திய அரசு உத்தரவு

Read Time:3 Minute, 7 Second

கேரளாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது அதில் கலந்துக்கொண்ட நார்வே பெண் இந்தியாவைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய நார்வே நாட்டுப் பெண், விசா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவரை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், வெளிநாட்டவர்கள் கலந்துக்கொண்ட சம்பவங்களும் காணப்பட்டது.


சென்னை ஐஐடியில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த மாணவரும், கேரளாவில் நார்வே பெண் சுற்றுலாப் பணி ஒருவரும் போராட்டத்தில் கலந்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


கேரளாவில் கடந்த 23-ம் தேதி நடந்த போராட்டத்தில் நார்வே நாட்டுப் பெண் ஜானே மீட் ஜான்ஸன்(வயது71) பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் தனது முகநூல் பக்கத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருந்தார்.


இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த ஜானே மீட் ஜான்ஸன் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றது மற்றும் முகநூலில் கருத்துக்களை தெரிவித்தது இந்தியாவின் விசா நெறிமுறைகளுக்கு எதிரானது.


இதனையடுத்து கொச்சியில் ஜான்ஸன் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்ற இந்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேறுமாறும், விசா விதிமுறைகளை மீறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.


ஜான்ஸன் தனக்கு இந்திய அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக காரணங்களை தெரிவித்தால்தான் வெளியேற முடியும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், எழுத்துப்பூர்வமாக ஏதும் தரமுடியாது என்று தெரிவித்த அதிகாரிகள் தாமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து துபாய்க்கு சென்று, அங்கிருந்து நார்வே செல்ல முடிவு செய்துள்ளதாக ஜான்ஸன் கூறி உள்ளார்.

இதனையடுத்து, துபாய் செல்லும் டிக்கெட்டை பார்த்து ஆய்வு செய்தபின்தான் அதிகாரிகள் ஜான்ஸனை வி்ட்டு சென்று உள்ளனர்.