தென்ஆப்பிரிக்கா பாணியில் ஆந்திராவில் மூன்று தலைநகரம், தெரிந்துக்கொள்வோம்.

Read Time:6 Minute, 44 Second

தென் ஆப்பிரிக்கா பாணியில் ஆந்திராவிலும் மூன்று தலைநகரம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

வரலாறு:-

சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த ஆந்திரம், ஆந்திர மக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், நாட்டின் முதல் மொழிவாரி மாநிலமாக கடந்த 1953-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிரிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் ராயலசீமா பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கர்னூலை மாநில தலைநகராக கொண்டு ஆந்திர மாநிலம் நாட்டின் முதல் மொழிவாரி மாநிலம் என்ற பெருமையுடன் செயல்பட்டு வந்தது.

இதனையடுத்துதெலுங்கு பேசும் மக்கள் பெருவாரியாக இருக்கும் மற்றொரு மாநிலமாக அப்போது வரை இருந்த தற்போதைய தெலங்கானா மாநிலமும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி ஆந்திர பிரதேச மாநிலம் அமைக்கப்பட்டபோது, ஐதராபாத் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமானது.

கடந்த 2014 ஜூன் மாதம் ஆந்திரம், தெலங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர், ஆந்திர முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து ஆட்சி நடத்தினார். அமராவதியில் விவசாய நிலங்களையும் கையகப்படுத்தி தலைநகரை கட்டமைக்க தொடங்கினார். இதற்கான பணிகள் நடைபெற்றது.

மூன்று தலைநகரம்:-


இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான பின் தலைநகர் அமராவதியில் நடைபெற்று வந்த அபிவிருத்தி பணிகள் அனைத்தும் முடங்கியது.


டிசம்பர் 18-ம் தேதி ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.


அவர் பேசுகையில், “புதிய திட்டத்தின்படி அமராவதி சட்டமன்ற தலைநகராகவும் விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் (தலைமைச் செயலகம்), கர்னூல் சட்டத்தலைநகராகவும் (உயர் நீதிமன்றம்) விளங்கும். இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது ஆய்வறிக்கையை 10 நாட்களில் அரசிடம் சமர்ப்பிக்கும். மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களும் வளர்ச்சி அடையும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரம் அமைக்கும் திட்டம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும்” என்றார்.

எதிர்ப்புக்கான காரணம் என்ன?


மாநிலத்தில் அமராவதியை தலைநகராக்கும் பணிகள் பாதி முடிவடையும் நிலையில் இப்போது இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்குதேசம் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறது. அமராவதிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.


ஏராளமான நிதி ஏற்கெனவே செலவிடப்பட்ட அமராவதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளாமல் விடுவது எந்த அளவுக்கு ஆக்கபூர்வ முடிவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.


ஆந்திரா ஏற்கெனவே நிதி நெருக்கடியை மாநிலம் எதிர்கொள்ளும் நிலையில் புதிய அறிவிப்பு மேலும் எவ்வளவு நிதியை கேட்கும் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்த சூழலில் ஜெகன்மோகன் ரெட்டி தனது முடிவை மறுபரிசீலனை செய்வதுதான் நல்லதாக தோன்றுகிறது என பலர் கருதுகின்றனர்.


மூன்று தலைநகரங்கள் விஷயத்தில் உடனடி நடவடிக்கைகளில் இறங்காமல் அமராவதி கட்டுமான மிச்ச வேலைகளை முடித்துவிட்டு படிப்படியாக அடுத்தடுத்த தலைநகர உருவாக்க வேலைகளில் இறங்கலாம்.


எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் சத்யநாராயணா பேசுகையில், அமராவதிக்கு வெள்ள ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அமராவதியில் நடைபெறும் தலைநகர கட்டுமான பணிகளுக்கு ஒன்றுக்கு இரண்டாக செலவு செய்யும் நிலை உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் விரயமாகிறது எனக் கூறுகிறார்.


எதிர்ப்புக்களை அடுத்து மூன்று தலைநகரம் விவகாரத்தில் அமைச்சரவை கூட்டத்தை ஜெகன்மோகன் தள்ளிவைத்துள்ளார்


3 தலைநகரம் கண்ட ஆந்திரம்

ஆரம்பத்தில் சென்னை மாகாணமாக இருந்து, பின்னர் கர்னூல், அடுத்து ஐதராபாத், மூன்றாவதாக அமராவதி என்று இதுவரை மூன்று தலைநகரங்களை பார்த்த ஆந்திர மாநிலம், தற்போது மேலும் இரண்டு தலைநகரத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று தலைநகரங்கள் உள்ளன. அதேபோன்ற நடவடிக்கையில் ஆந்திர மாநில அரசும் இறங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டோரியா நிர்வாக தலைநகராகவும், புளோம் பாண்டேன் நீதி தலைநகராகவும், கேப்டவுன் தலைமைச் செயலக தலைநகராகவும் உள்ளது. இலங்கை, மலேசியா போன்ற நாடுகளும் இரண்டு தலைநகரங்களை கொண்டுள்ளன.

இந்திய மாநிலங்களில் மராட்டியம் இரண்டு தலைநகரங்களை மும்பை மற்றும் நாக்பூர் (இது மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடத்தப்படும் இடம்) கொண்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா மற்றும் தர்மஷாலா (குளிர்காலம்) தலைநகரங்கள் உள்ளன. முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு (குளிர்காலம்) தலைநகரங்களாக இருந்தது.