இந்தியா முழுவதும் கவனம்பெற்ற பெசண்ட் நகர் கோலம்…! காரணம் என்ன?

Read Time:3 Minute, 5 Second

சென்னை பெசண்ட்நகர் கடற்கரை பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற கோலங்களை போட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டம் (சிஏஏ, CAA) மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி. NRC), தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (என்.பி.ஆர்., NPR) எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை பெசண்ட்நகர் கடற்கரை பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற கோலங்களை போட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். “No to CAA”, “No to NRC” என்ற வாசகங்கள் கோலங்களில் இடம்பெற்று இருந்தது.

தமிழகத்தில் மக்கள் வழக்கமாக வீடுகளுக்கு முன்னதாக கோலமிடுவது வழக்கம். மார்கழி மாதம் அதிகாலையில் கோலமிடுவது வழக்கமாக இருக்கிறது. மார்கழி மாதம் கோலப்போட்டிகள் ஆங்காங்கே நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் இந்தவடிவில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

கோலமிட்டு போராட்டம் நடத்துவதற்கு முறையாக அனுமதியை பெறவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் காவல் நிலையம் அருகே உள்ள சமூக நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கைது செய்யப்பட்ட காயத்ரி என்ற பெண் தங்களிடம் பேசியதாக தி குயிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. “சென்னை காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனவே, எதிர்ப்பதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன என்று நாங்கள் நினைத்தோம், இது மார்கழி மாதம் என்பதால், எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய கோலங்களை வரைய நினைத்தோம். இது எங்கள் கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். ” என காயத்ரி கூறியுள்ளார் என தி குயிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 10-15 பேர் இருந்தோம், ஆனால் எந்த நேரத்திலும் இரண்டு பேருக்கு மேல் ஒன்றாக நிற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், ஏழு கைதிகளும் போலீசாரால் விடுவிக்கப்பட்டனர்.