சல்மான்ருஷ்டியின் நூற்றாண்டு பழமையான பங்களாவின் 50 வருடகால பிரச்சினை ஒருபார்வை

Read Time:4 Minute, 45 Second

50 வருட பிரச்சினையில் சிக்கி சட்டபோராட்டம் நடந்துவரும் சல்மான் ருஷ்டியின் நூற்றாண்டு பழமையான பங்களா மதிப்பு ரூ. 130 கோடி என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் பூர்வீக பங்களா டெல்லியில் ஆடம்பரமான சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அடுத்ததாக ஒரு ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது இந்த பங்களா. இந்த பங்களா தொடர்பாக சுமார் 50 வருடகாலமாக பிரச்சினைகள் இருந்து வருகிறது. அப்படியென்ன பிரச்சினையென்பதை பார்க்கலாம்.

1970-ம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் தந்தை அனிஸ் அகமது ருஷ்டி பழமையான பங்களாவை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த பிக்குராம் ஜெயினுக்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளார். அனிஸ் முகமது ருஷ்டி, பிக்குராம் ஜெயினுக்கு ரூ .3.75 லட்சத்திற்கு வீட்டை விற்க ஒப்பந்தம் செய்துள்ளார். ஜெயின் முதல்கட்டமாக அனிஸ் அகமது ருஷ்டிக்கு ரூ .50,000 செலுத்தியதோடு, உரிமையாளருக்கு வருமான வரி அதிகாரிகளிடமிருந்து அனுமதி சான்றிதழ்கள் கிடைத்தபின் மீதமுள்ள தொகையை வழங்குவதாக உறுதியளித்து உள்ளார்.

ஆனால், இதில் பிரச்சினை ஏற்பட்டது. இரு குடும்பங்களும் தகராறில் சிக்கி, ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மதிக்கவில்லை என்று ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர். 1970 ஒப்பந்தத்தை அனிஸ் ருஷ்டி மதிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை 1977-ல் நாடினார் ஜெயின். இது தொடர்பான வழக்கு ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. 2012-ம் ஆண்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பிக்குராம் ஜெயினுக்கு ஆதரவாக அமைந்தது. அவரிடம் அந்த வீட்டை சந்தை விலைக்கு சல்மான் ருஷ்டி குடும்பத்தினர் ஒப்படைக்க வேண்டும் என்றும், சந்தை விலையை டெல்லி உயர்நீதிமன்றம் நிர்ணயித்து கூற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அந்த வீட்டின் சந்தை மதிப்பு ரூ.130 கோடி என டெல்லி உயர்நீதிமன்றம் மதிப்பிட்டு கூறி உள்ளது.

இந்த விலையில் வீட்டை வாங்க ஒருவர் இருப்பதாக ருஷ்டி தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து ஜெயின் குடும்பத்தினரால் அந்த விலையில் பங்களாவை வாங்க முடியாவிட்டால், ருஷ்டி வீட்டை ஆறு மாதங்களுக்குள் ரூ .130 கோடிக்கு மற்றவர்களுக்கு விற்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் ரூ .130 கோடிக்கு ருஷ்டிகளால் விற்க முடியாவிட்டால், அன்றிலிருந்து 60 நாட்களுக்கு ஜெயின் குடும்பத்தினர் ரூ .75 கோடிக்கு சொத்தை வாங்க உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை, டிசம்பர் 4, 2012 அன்று நிர்ணயம் செய்யப்பட்டது.
ரூ. 75 கோடிக்கு ஜெயினால் சொத்துக்களை வாங்க முடியாவிட்டால், 1970-ல் இரு தரப்பினரும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருந்து ருஷ்டி விடுபடுவார்கள் என்று நீதிமன்றம் கூறியது.

ஜெயின் மகன் ஆதர்ஷ் பேசுகையில், எனது தந்தை பிக்கு ராம் ஜெயின் 1970-ல்அனிஸ் அகமது ருஷ்டியிடமிருந்து (சல்மான் ருஷ்டியின் தந்தை) பங்களாவை வாங்கினார். முன்கூட்டியே பணம் செலுத்தவும், விற்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் வீட்டின் விலை ரூ .3.75 லட்சம். ருஷ்டி குடும்பத்தினர் லண்டனுக்கு குடிபெயர்ந்தார், என் தந்தை அவர்களுக்கு முழு கட்டணத்தையும் கொடுக்க முயன்றார், ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. எனவே, நாங்கள் நீதிமன்றம் சென்றோம் எனக் கூறியுள்ளார்.