இஸ்லாமிய கூட்டமைப்பு பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை…

Read Time:8 Minute, 1 Second

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உலகில் ஐ.நா.வுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அரசு சபை ஆகும்.

இஸ்லாமிய கூட்டமைப்பின் பணி அறிக்கையானது, “இது, இஸ்லாமிய உலகின் கூட்டுக் குரல்” என்று கூறுகிறது. இஸ்லாமிய உலகின் நலன்களை பாதுகாக்க செயல்படும் என்கிறது. இது, 24 உறுப்பு நாடுகளால் 1969 இல் நிறுவப்பட்டது. இன்று, நான்கு கண்டங்களை சேர்ந்த 57 உறுப்பு நாடுகளுடன் செயல்படும் இஸ்லாமிய கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபைக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப்பெரிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும், மொத்த மக்கள் தொகை 1.8 பில்லியனுக்கும் அதிகமாகும்.

அதன் உறுப்பு நாடுகளில் பெரும்பான்மையானவை இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளாகும், மற்றவை குறிப்பிடத்தக்க இஸ்லாமிய மக்களை கொண்ட ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளாகும்.

அரபு நாடுகளின் 22 நாடுகள் இஸ்லாமிய கூட்டமைப்பில் உறுப்பு நாடாக உள்ளன. அரபு நாடுகளின் கூட்டமைப்பில் இல்லாத நாடுகளான துருக்கி, ஈரான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளும் இதில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதில் ரஷ்யா, தாய்லாந்து உட்பட ஐந்து பார்வையாளர் உறுப்பினர்களும் உள்ளனர். இந்த அமைப்பு ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நிரந்தர பிரதிநிதிகளை கொண்டுள்ளது மற்றும் அதன் உத்தியோகபூர்வ மொழிகள் அரபு, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகும்.

இஸ்லாமிய கூட்டமைப்பு ஏன் நிறுவப்பட்டது? செயல்பாடு என்ன?

இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான இடங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் மிகவும் பழமையான அல்-அக்ஸா மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் முதல் கூட்டம் மொராக்கோவில் செப்டம்பர் 1969-ல் கூடியது. இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, 24 இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் தலைநகர் ரபாத்தில் சந்தித்து இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பை நிறுவினர்.

மார்ச் 1970-ல் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் வெளியுறவு மந்திரிகளின் முதல் இஸ்லாமிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது, மேலும் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஒரு நிரந்தர செயலகம் அமைப்பதற்கான திட்டங்கள் நிறுவப்பட்டன. பாலஸ்தீனம் தொடர்பான பிரச்சினைகள் இஸ்லாமிய கூட்டமைப்பு நிகழ்ச்சி நிரல் மற்றும் உச்சி மாநாடு விவாதங்களில் மையமாக உள்ளன. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை இந்த அமைப்பு தொடர்ந்து கண்டித்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்சாசனத்தின்படி இஸ்லாமிய கூட்டமிப்பு இஸ்லாமிய மக்களை பாதுகாத்தல், உறுப்பு நாடுகளின் தேசிய இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பங்களிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இஸ்லாமிய கூட்டமைப்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இஸ்லாமிய உச்சி மாநாட்டை நடத்துகிறது. உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சாசனத்தின் நோக்கங்களை அடைவதற்கான வழிகளைப்பற்றி விவாதிக்கின்றனர், அதன் உறுப்பு நாடுகளை பற்றிய கொள்கை முடிவுகளை எடுக்கிறார்கள்.

அமைப்பில் ஒவ்வொரு உறுப்பு நாடுகள் வாக்குகளை பெறுகின்றன. ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் ஒரு தீர்மானத்தை முன்வைக்க முடியும், மற்றவர்கள் அதில் வாக்களிக்கலாம், மாற்றங்களையும் பரிந்துரைக்கலாம். மிகவும் வழக்கமான அடிப்படையில் கூட்டம் நடைபெறுகிறது. அமைப்பின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு கூடுகிறது. கூட்டத்தின் முடிவுகளை செயல்படுத்துவதற்கு பொதுச் செயலகம் இஸ்லாமிய கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பு பொறுப்பாகும்.

1969 ஜூன் 17-ம் தேதி ஈரான் நாட்டுத் தலைநகர் தெக்ரானில் இந்த சபை ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவின் நிலை?

மக்கள்தொகை அளவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, இஸ்லாமிய கூட்டமைப்பு சபை தொடங்கப்பட்டபோது மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. தொடக்க விழாவுக்கு அழைக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பாலும் நிர்ப்பந்தத்தாலும் அந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

18 கோடி இஸ்லாமியர்கள் உள்ள இந்தியாவுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு சபையில் அங்கம் வகிக்க எல்லாத்தகுதிகளும் இருந்தும், பாகிஸ்தானின் கடும் எதிர்ப்பால் இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்தது.
முதல் முறையாக அரைநூற்றாண்டு காலத்திற்கு பிறகு கடந்த ஏப்ரலில் இந்தியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றவும் அனுமதிக்கப்பட்டது பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத இந்தியாவின் ராஜதந்திர வெற்றியாகும்.

இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பை சாதுர்யமாக பயன்படுத்தி இந்தியாவின் கலாசாரப் பன்முகத் தன்மையையும், அரசின் பின்துணையுடனான பாகிஸ்தானிய பயங்கரவாதம் குறித்தும் இஸ்லாமிய கூட்டமைப்பு சபையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உரையாற்றியதுதான் தனிச் சிறப்பாகும். இஸ்லாமிய கூட்டமைப்பு சபை என்பது ஐ.நா., அணிசேரா நாடுகள் அமைப்பு, ரஷியா, தாய்லாந்து ஆகியவை கண்காணிப்பாளர்களாக கலந்துகொள்ளும் உலகின் இரண்டாவது சர்வதேச அமைப்பு. இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்ததை எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் வன்மையாக எதிர்க்கவும் கண்டிக்கவும் முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றுவரையில் பாகிஸ்தான் எதிர்ப்பால் இந்தியாவால் இஸ்லாமிய கூட்டமைப்பில் உறுப்பு நாடாக முடியவில்லை…