இந்திய முப்படைகளுக்கும் ஒரே தளபதியானார் பிபின் ராவத்…

Read Time:4 Minute, 4 Second

இந்தியாவில் முப்படைகளுக்கும் ஒரே பாதுகாப்பு தளபதியை (சி.டி.எஸ்.) வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை பல சந்தர்ப்பங்களில் நிபுணர்கள் மற்றும் வீரர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டுள்ளது. இதனுடைய நோக்கம் மூன்று படைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதாகும்.

செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் பாதுகாப்பு படைகளுக்கு ஒரு நீண்டகால அறிவிப்பை வெளியிட்டார். இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகிய மூன்று சேவைகளுக்கான தலைமை தளபதி (சி.டி.எஸ்.) பதவியை நிறுவ தனது அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1962-ம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரின்போது, இந்தியாவின் முப்படைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் விமானப்படை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது இந்திய கடற்படையிடம் பல்வேறு முக்கிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையே மூன்று படைகளுக்கும் ஒரே தலைமையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

வங்கதேச விடுதலைக்காக கடந்த 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடந்த போரின்போது அன்றைய இந்திய ராணுவ தளபதி சாம் மானெக் ஷா திறம்பட செயல்பட்டார். விமானப்படை, கடற்படை தளபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். இதுவே, இந்தியா போரில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது.

இதன்பின் கடந்த 1999-ம் ஆண்டில் பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடந்தபோது இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒருங்கிணைந்த தலைமை அவசியம் என்பதை அரசியல் தலைமையும் பாதுகாப்புப்படைகளும் அழுத்தமாக உணர்ந்தன. இதுதொடர்பாக அப்போதைய துணை பிரதமர் எல்.கே.அத்வானி தலைமையில் கார்கில் மறுஆய்வு குழு அமைக்கப்பட்டது.

குழு விரிவான ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் அறிக்கையை அளித்தது. அதில், ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு ஒரே தலைமை தளபதியை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டில் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கார்கில் மறு ஆய்வு குழுவின் பரிந்துரைகளை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்தார்.

ஒரே தளபதி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிகளை உருவாக்கினார். இந்த பின்னணியில் சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது, முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமனம் செய்யப்படுவார் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். தேச நலன் சார்ந்த இந்த திட்டத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

தற்போது ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.