இஸ்லாமிய கூட்டமைப்பில் விரிசல்…! இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் காய் நகர்த்துவது எப்படி?

Read Time:4 Minute, 30 Second

இஸ்லாமிய கூட்டமைப்பில் காணப்படும் விரிசலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பாகிஸ்தான், சவுதி அரேபியாவை வைத்து இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தியது அம்பலமாகியுள்ளது.

57 உறுப்பு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பில் காஷ்மீர் விவகாரத்தில் பெரும்பாலும் பாகிஸ்தான் ஆதரவைப்பெற்றுள்ளது.

உலகில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடான இந்தியா இதில் உறுப்பு நாடாக இல்லை. பாகிஸ்தானின் எதிர்ப்பு காரணமாக இந்தியாவால் அதில் உறுப்பு நாடாக ஆகமுடியவில்லை.

இப்போது கூட்டமைப்பில் விரிசல் தென்பட ஆரம்பித்துள்ளது.

எப்படியென்றால், இக்கூட்டமைப்பின் உச்சிமாநாடு ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இவ்வாண்டு டிசம்பர் 19-21 நாட்களில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது.

இதில் பாகிஸ்தான் கலந்துக்கொள்ளவில்லை. இதற்கான காரணம் கசிந்ததில் சவுதி அரேபியாவின் நிர்பந்தம் காரணமாக பாகிஸ்தான் கலந்துக்கொள்ளவில்லை என்றும். இதனை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் டிசம்பர் 19-21 நாட்களில் நடைபெற்ற மாநாட்டை சவுதி அரேபியா, வளைகுடா நாடுகளின் தலைமைக்கு கீழ் செயல்படும் இஸ்லாமிய கூட்டமைப்பின் செயல்பாட்டை மட்டப்படுத்த முயற்சியாகும், மற்றொரு இஸ்லாமிய அமைப்பை உருவாக்குவதற்கான செயலாக பார்க்கிறது. மலேசியா மற்றும் சவுதி அரேபியா இடையிலான மோதல் போக்கு தென்பட தொடங்கியுள்ளது.

இதனால் கோலாலம்பூர் உச்சிமாநாட்டை பாகிஸ்தான் தனக்கு ஆதரவு தளமாக்கியுள்ளது.

இந்தியாவுடனான சவுதி அரேபியாவின் வர்த்தக உறவுகள் வளர்ந்து வருகிறது, இதுபோக இஸ்லாமிய கூட்டமைப்பை வைத்து நெருக்கடியை கொடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டது.

பாகிஸ்தானை பொறுத்தவரையில் இந்தியாவிற்கு எதிரான எந்தஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் போதும் என்ற நிலையில் உள்ளது. இதற்காக முக்கிய நாடாக சவுதி அரேபியா என்று பார்க்கும் பாகிஸ்தான், கோலாலம்பூர் உச்சிமாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்றால் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை கூட்ட வேண்டும் என சவுதிக்கு நிபந்தனை வைத்துள்ளது.

இதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது. இப்போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தை சவுதி விரைவில் கூட்ட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கோலால்பூர் உச்சிமாநாட்டை பாகிஸ்தான் ரத்து செய்த பின்னர், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசால் பின் பர்கான் பாகிஸ்தானுக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ளார். அப்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது குரேஷியை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள இஸ்லாமிய கூட்டமைப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தலை முன்வைத்துள்ளது. இதனையடுத்து இத்திட்டத்தை சவுதி அரேபியா செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பாகவும் பாகிஸ்தான் சவுதியிடம் பேசியுள்ளது என டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.