24 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட இந்திய கடற்படை திட்டம்; இதில், ஆறு அணுசக்தி வசதி கொண்டது…!

Read Time:1 Minute, 55 Second

நீருக்கடியில் கடற்படையின் வலிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை ஆறு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 24 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது என்று நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை நாடாளுமன்றக் குழுவிடம் கப்பல் கட்டுவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில், புதிதாக 24 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்திய கடற்படையிடம் ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் சக்ரா ஆகிய 2 நீர்மூழ்கி அணுசக்தி கப்பல்கள் உட்பட 17 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இதில் பெரும்பாலான நீர்மூழ்கிக் கப்பல்கள் 25 ஆண்டுகள் பழமையானவையாகும். அதில், 13 கப்பல்கள் 17 முதல் 32 ஆண்டுகள் பழமையானவைகும்.

எனவே 24 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் திட்டம் குறித்து நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை கொடுத்துள்ளோம். இதில் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் அணுசக்தி வசதி கொண்டதாக இருக்கும் என கடற்படை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய கடல் எல்லைப்பகுதியில் அண்மைக்காலமாக சீன கடற்படை கப்பல்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து நமது கடற்படையின் பலத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக புதிதாக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.