பெல்காம் யாருக்கு சொந்தம்? மராட்டியம் – கர்நாடகம் இடையிலான மோதல் என்ன?

Read Time:5 Minute, 15 Second

மராட்டியம் மற்றும் கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடித்துவரும் எல்லை தகராறு மீண்டும் வெடித்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) கோலாப்பூர் (மராட்டியம்) மற்றும் பெல்காம் இடையே பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது.

பல்வேறு கன்னட அமைப்புகள் சனிக்கிழமை பெல்காமில் போராட்டம் நடத்தி மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உருவ பொம்மையை எரித்தன. மறுபுறம் சிவசேனா தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை கோலாப்பூரில் தெருக்களில் வந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மைகளை எரித்தனர். இதனையடுத்து இருமாநிலங்களும் அரசு பஸ் சேவைகளை எல்லையில் நிறுத்தியுள்ளது. பெல்காம் மற்றும் பிற எல்லைப்பகுதிகள் தொடர்பாக மராட்டியம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நீண்டகால பிரச்சினையாக உள்ளது. மேலும், இது தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சர்ச்சையின் ஆரம்பம்

பெல்காம் மாவட்டம் கர்நாடகா, மஹாராஷ்டிரா இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பெல் காம், நிபாளி,ஹெல்லூர்,கனாப்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் மராட்டியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து’பெல்காம் யாருக்கு சொந்தம்?’ என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.

மராட்டியர்கள் அதிகமாக வாழும் பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று அங்குள்ள மராட்டிய அமைப்புகளும், சிவசேனா அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதியை கர்நாடகா உதயமான தினமாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் பெல்காமில் மட்டும் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

முந்தைய பம்பாய் மாகாணம் ஒரு பன்மொழி மாகாணமாக விழங்கியது. இன்றைய கர்நாடக மாவட்டங்களான பிஜாப்பூர், பெல்காம், தார்வார் மற்றும் உத்தரா-கன்னடம் ஆகியவையும் அடங்கும்.
1948-ம் ஆண்டில் பெல்காம் நகராட்சி, மராத்தி மொழி பேசும் மக்கள்தொகை கொண்ட மாவட்டத்தை முன்மொழியப்பட்ட மாராட்டிய மாநிலத்தில் தங்களை இணைக்குமாறு கோரியது. இருப்பினும், 1956-ம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு சட்டம் மொழியியல் மற்றும் நிர்வாக அடிப்படையில் மாநிலங்களை பிரித்தது, பெல்காமை அப்போதைய மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாற்றியது (இது 1973 இல் கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது).

மராட்டியம் இந்த சேர்க்கைக்கு 1957 செப்டம்பரில் மத்திய அரசுடன் கடும் போராட்டத்தை மேற்கொண்டது. இது, 1966 அக்டோபரில் முன்னாள் தலைமை நீதிபதி மெஹர் சந்த் மகாஜனின் தலைமையின் கீழ் மகாஜன் ஆணையம் அமைக்க வழிவகுத்தது. ஆகஸ்ட் 1967 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆணையம் 264 கிராமங்களை மராட்டியத்திற்கு மாற்றவும், பெல்காம் மற்றும் 247 கிராமங்கள் கர்நாடகாவுடன் இருக்கவும் பரிந்துரைத்தன. மகாராஷ்டிரா இந்த அறிக்கையை நிராகரித்து மற்றொரு மறுஆய்வு கோரியது.

மராட்டியம் எல்லையில் உள்ள 865 கிராமங்களுக்கும், தற்போது கர்நாடகாவின் ஒரு பகுதியாக இருக்கும் பெல்காம் நகரத்திற்கும் தொடர்ந்து உரிமை கோருகிறது. மராட்டியத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பெல்காம் தங்கள் மாநிலத்திற்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. இந்த கூற்றுக்களை கர்நாடகா எதிர்க்கிறது. மராட்டியத்தில் இப்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. புதிய முதல்வராக பதவியேற்றுள்ள உத்தரவ் தாக்கரே கர்நாடகாவுடன் நிலவும் எல்லை விவகாரம் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கையை மேற்படுத்த அமைச்சர்கள் சாகன் புஜ்பால் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை டிசம்பர் 8 ம் தேதி ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்தார். இதனையடுத்து கர்நாடகம் மற்றும் மராட்டியம் இடையே புதியதாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.