நெல்லை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மானூர் பெரியகுளம்… ஒருபார்வை

Read Time:3 Minute, 31 Second

நெல்லை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மானூர் பெரியகுளம் 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீராதாரங்களில் தண்ணீர் நிரம்பும். கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார்கோயில், குண்டாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு ஆகிய 8 அணைகள் நிரம்பியிருந்தது.

இந்நிலையில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்திலும் பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார்கோயில், குண்டாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி ஆகிய 7 அணைகள் நிரம்பி வழிந்தன. அங்கு, ஒரே ஆண்டில் 2-வது முறையாக இத்தனை அணைகள் நிரம்பியது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான மானூர் பெரியகுளம் 1,120 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இக்குளம் ஒரு அணைக்கட்டுக்கு சமமானது. இங்கு 180 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த குளம் மூலம் அப்பகுதியில் உள்ள 30 கிராமங்களில் 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த குளம் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றியுள்ள 30 கிராமங்களில் விவசாயம் செழிக்கும். கடந்த 2006, 2011, 2015 -ம் ஆண்டுகளில் இந்த குளம் நிரம்பியது. இப்போது மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இக்குளம் நிறைந்துள்ளது.

இந்த குளம் நிரம்பும்போதெல்லாம் இப்பகுதி விவசாயிகள் பிசானம், முன்கார் ஆகிய இருபருவ சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்வர்கள். மழையால் தற்போது இந்த குளம் மீண்டும் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் மகிழ்ச்சிடைந்த விவசாயிகள் சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இக்குளத்திற்கு சிற்றாறு பாசனம் மூலம் குற்றாலத்திலிருந்து தண்ணீர் வருகிறது. சிற்றாறு பாசன கால்வாயில் சுமார் 19 குளங்கள் நிரம்பிய பின்னரே தண்ணீர் மானூர் பெரியகுளத்துக்கு வரும். பெரும்பாலும் அதற்குள் பருவமழை முடிந்து விடுவதும் உண்டு. இவ்வாண்டு குளம் நிரம்பியுள்ளது.

நெல்லை மாவட்ட நிர்வாகமும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மையம், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து குளத்துக்கு நீர்வரும் கால்வாயை தூர்வாரி செப்பனிடும் பணிகளை கடந்த மே மாதத்தில் சிறப்பாக செயல்படுத்தியதால், குளம் நிறைந்துள்ளது என மக்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். மீண்டும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டி அடைப்புகளை மக்கள் ஏற்படுத்தாமல் இருந்தால் சரியென அவர்கள் கூறுகிறார்கள்.