கெத்து காட்டும் பிரியங்காவின் டார்க்கெட்…! சிக்குவாரா? யோகி ஆதித்யநாத்…

Read Time:4 Minute, 53 Second

தோல்விகளால் துவண்ட காங்கிரஸ் கட்சிக்கு உயிர்க்கொடுக்க ஜனவரியில் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்தார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைபோன்று இருப்பதால் பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை காங்கிரசார் மத்தியில் தொடர்ந்து இருந்தது. கடைசியில் காங்கிரஸ் கட்சியும் அவரை உத்தரபிரதேச மாநில கிழக்கு பிராந்திய பொதுச்செயலாளராக ஜனவரி 23-ம் தேதி அறிவித்தது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருந்த நிலையில் பிரியங்கா உ.பி.யில் தீவிரமாக பணியாற்றினார். அவருடைய பிரசாரத்திற்கு கூட்டம் கூடியது. ஆனால், அது வாக்காகவில்லை. மீண்டும் பா.ஜனதாவே அங்கு வெற்றியை தனதாக்கியது.

80 நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்ட உ.பி.யில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அங்கு 71 தொகுதிகளை தன்வசப்படுத்தியது. 2017 சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா 325 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. 2019 தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றியது. மாநிலத்தில் பெரிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதனால் பா.ஜனதாவின் வெற்றி சற்று பாதிப்பு கண்டது. காங்கிரஸ் சோனியா காந்தி போட்டியிட்ட தொகுதியில் மட்டும் வென்றது. ராகுல் காந்தி அமேதியில் தோல்வியை தழுவினார்.

பிரியங்கா வருகை தாக்கத்தை ஏற்படுத்தியதா? என்றால் இல்லையென்று சொல்லவிடலாம். பிரியங்கா பொதுச்செயலாளராக பணியாற்றிய பகுதியில் 41 தொகுதிகள் இருக்கிறது. இங்கு 2.5 வாக்குகளை மட்டும் கட்சிக்கு அதிகமாக பெற்றுக் கொடுத்தார்.

அதாவது, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு காங்கிரஸ் பெற்ற வாக்கு 5.39% ஆகும். இதனை 7.96% ஆக உயர்த்தினார். இதனால், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி 5 தொகுதிகளில் வெற்றிப்பெறுவதை தடுத்தார். பா.ஜனதாவிற்கு கூடுதலாக 5 தொகுதிகள் கிடைக்க உதவினார்.

டார்க்கெட்… பிரியங்கா அரசியலுக்கு வரும்போதே 2022 சட்டமன்றத் தேர்தல்தான் நம்முடைய இலக்கு என காங்கிரசார் மத்தியில் கூறிவிட்டு பணியை தொடங்கினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், உ.பி.யை மையமாக கொண்டே பணியாற்றி வருகிறார். சிறுபான்மையின மக்கள், கிராம மக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 2018-ல் ம.பி. காங்கிரஸ் ஆட்சிக்குவருவதற்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்யா கிராமங்களுக்கு பயணம் செய்தது உதவியது. இதேபாணியை பிரியங்காவும் கையில் எடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அரசின் நடவடிக்கையினால் பாதிக்கப்படும் மக்களை தாமதம் செய்யாமல் உடனடியாக சென்று சந்திக்கிறார். உதவிகளை செய்கிறார்.

பாலியல் பலாத்காரங்களில் பாதிக்கப்படும் பெண்களையும் உடனடியாக சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அரசையும் நடவடிக்கை எடுக்கச் செய்கிறார். இதனால் மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற தொடங்கியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு மக்களுடன் நான் உள்ளேன் என்று காட்டுவதில் பிரியங்கா காந்தி கெத்து காட்டுகிறார். மறுபுறம் யோகி ஆதித்யநாத் அரசின் மீதான நம்பிக்கையை சரிக்கவும் செயலாற்றி வருகிறார்.

மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பா.ஜனதாவிற்கு எதிரானவர்களை ஒன்றாக வாக்காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். உ.பி. 2022-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. உ.பி.யை டார்க்கெட்டாக வைத்து பிரியங்கா பணியாற்றிவருவதால், பா.ஜனதாவும், யோகி ஆதித்யநாத்தும் சிக்குவார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.