போலீஸ் அதிகாரி போராட்டக்காரர்களை பாகிஸ்தான் போகச் சொன்னது ஏன்?

Read Time:3 Minute, 22 Second

உ.பி.யில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை போலீஸ் அதிகாரி பாகிஸ்தான் போகச் சொன்னது சர்ச்சையாகியுள்ளது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில், இஸ்லாமியர்களையும் இணைக்க வேண்டும் என இந்தியா முழுவதும் போராட்டம் நடக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் கடந்த 20–ந் தேதி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் வன்முறை தலைவிரித்தாடியது.

அப்போது, போராட்டக்காரர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அகிலேஷ் நாராயண் சிங் பேசியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியது.

போலீஸ் அதிகாரிகளுடன் ஒரு குறுகிய சந்தில் நின்று கொண்டு, 3 பேரிடம், “போராட்டக்காரர்களை பாகிஸ்தானுக்கு போக சொல்லுங்கள். இங்கே சாப்பிட்டு கொண்டு, வேறு எந்த நாட்டையாவது புகழ்வார்கள்” என கூறிஉள்ளார் அகிலேஷ் நாராயண் சிங். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய அரசியல் சாசனம் யாரையும் இப்படி பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை என கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையே நான் ஏன் அப்படி பேசினேன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நாராயண் சிங், “பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பியவர்களை பார்த்துத்தான், அவர்களை அங்கு போகச்சொல்லுங்கள் என்று சொன்னேன்” என்றார்.

இதுபற்றி மீரட் போலீஸ் ஏ.டி.ஜி. பிரசாந்த் குமார் கருத்து தெரிவிக்கையில், சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகி, இப்போது அமைதி திரும்பியுள்ள நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பதில் சதி உள்ளது என்றார்.

இதற்கிடையே பா.ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “சம்பவம் உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது. காவல்துறை அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.