நித்திக்கு ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மத்திய அரசு தீவிரம்!

Read Time:3 Minute, 46 Second

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சர்ச்சைக்கு பெயர் பெற்ற பிரபல சாமியார் நித்யானந்தா தொடர்பான பல்வேறு வழக்குகளை கர்நாடக மாநில சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய வழக்கு தொடர்பாக நித்யானந்தா மீது அம்மாநில ராமநகர் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிலமோசடி, ஆள்கடத்தல், நிதிமோசடி போன்று பல வழக்குகளை எதிர்க்கொண்டாலும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் நித்தியானந்தா, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நித்யானந்தா, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார்.

ஈக்குவடார் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உள்ளார். ஏற்கனவே சகோதரிகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கழுத்துவரையில் பிரச்சினையை சந்தித்துவரும் நித்தியானந்தாவிற்கு மற்றொரு பிரச்சினையும் உடன்வந்துள்ளது.

தமிழ்நாடு திருச்சி நாவலூர் குட்டபட்டு மேலத்தெருவை சேர்ந்த ஜான்சி ராணியின் மகள் சங்கீதா கடந்த 2014-ம் ஆண்டு பிடதி ஆசிரமத்தில் இறந்தார். இவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக ஜான்சி ராணி குற்றம்சாட்டினார். சங்கீதாவின் மர்ம சாவு பற்றிய விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சங்கீதா சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜான்சிராணி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம், கர்நாடக அரசுக்கு அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தா வெளிநாட்டில் உள்ளார். நித்யானந்தாவை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக நித்யானந்தா மீது சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பெற வேண்டும். அதன்பிறகு நித்யானந்தா வழக்கை விசாரிக்கும் விசாரணை அமைப்பு அவர் பற்றிய அனைத்து விவரங்களையும் மத்திய விசாரணை அமைப்புக்கு அளிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் ‘இண்டர்போல்’ மூலம் நித்யானந்தாவுக்கு எதிராக ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் வழங்கப்படும். இதையடுத்து நித்யானந்தா இருக்கும் இடம் தெரிந்தவுடன் அவரை நாடு கடத்த வெளியுறவுத்துறை உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். எனவே, நித்யானந்தா வழக்கில் கர்நாடக மாநில விசாரணை அமைப்பு உடனடியாக நித்யானந்தாவுக்கு எதிராக ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.