மாநில அரசுக்களுக்கு செக்…! ஆன்லைனில் குடியுரிமை – மத்திய அரசு அதிரடி

Read Time:4 Minute, 53 Second

மாநில அரசுக்களுக்கு அதிகாரமில்லை என குடியுரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் குடியுரிமை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. கேரள சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. எனவே, அரசியல் சட்டப்படி, அந்த சட்டத்தை எல்லா மாநிலங்களும் அமல்படுத்தியே தீர வேண்டும். இது தேசநலன் சார்ந்தது. கேரளாவோ, மேற்கு வங்காளமோ, ராஜஸ்தானோ, மத்தியபிரதேசமோ எந்த மாநிலமாக இருந்தாலும் இதை அமல்படுத்தியாக வேண்டும்.

அப்படி அமல்படுத்த முடியாது என்று கூறினால், அது அரசியல் சட்டத்துக்கு ஏற்புடையது அல்ல. குடியுரிமை சட்டம் என்பது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்காக கொண்டுவரப்பட்டது. எனவே, இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை. காங்கிரஸ் கட்சிதான் இந்த சட்டத்துக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருகிறது. இது, நாட்டுக்கு நல்லதல்ல எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அனைத்து விதமான நடைமுறைகளையும் ஆன்லைனில் நடத்தி குடியுரிமை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின் கீழ் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு வரும் விண்ணப்பங்கள் மாஜிஸ்திரேட் மூலமே பரிசீலிக்கப்பட உள்ளது. ஆனால், அதை செயல்படுத்த ஒருசில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த முறையை நீக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசீலிக்கும் முறைக்கு பதிலாக புதிய அதிகாரியை நியமித்து அவர் மூலம் பரிசீலிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அதன்படி, விண்ணப்பம் தொடர்பான அனைத்து விதமான பரிசீலனைகள், ஆய்வுகள் அனைத்தும் ஆன்லைனில் முடிந்து, ஆன்லைனிலேயே குடியுரிமை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

குடியுரிமை பெறுவதில் அனைத்து விதமான முறைகளையும் ஆன்லைன் மூலம் கொண்டுவந்தால், மாநில அரசுகளின் தலையீடு எந்த இடத்திலும் இருக்க வாய்ப்பு இருக்காது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் கூறுவதற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. ஏனென்றால் இந்த திட்டம் அரசியலமைப்பின் 7-வது பட்டியலில் மத்திய அரசின் பட்டியலுக்குள் வந்துவிடும். ஆதலால், மத்திய அரசு இயற்றிய ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறுவதற்கு எந்த மாநில அரசுக்கும் அதிகாரமில்லை. மத்திய அரசுப் பட்டியலில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரம், ரயில்வே, குடியுரிமை உள்ளிட்ட 97 பிரிவுகள் அடங்கியுள்ளன. இந்தப் பிரிவுகளில் சட்டம் இயற்றும்போது அதை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூற முடியாது.