இந்திய வரலாற்றில் புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை; பணிகள் என்ன? தெரிந்துக்கொள்வோம்

Read Time:4 Minute, 34 Second

சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி,இந்தியாவின் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்றார். இதனையடுத்து முப்படை தலைமை தளபதியின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை வகுப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து முப்படை தலைமை தளபதி பதவி உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இடனையடுத்து, டிசம்பர் 24-ம் தேதி இந்த பதவியை மத்திய அரசு முறைப்படி அமைத்தது. அதற்கான பொறுப்புகளையும் அறிவித்தது. இப்பதவியில் அமரப்போகும் முதலாவது நபர் இந்திய ராணுவ தளபதியாக இருந்த பிபின் ராவத் ஆவார்.

மத்திய அரசு 65 வயது வரை இப்பதவியை வகிக்க சட்டத்திருத்தம் செய்துள்ளது. எனவே, 65 வயது வரை பிபின் ராவத் இந்த பதவியை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 நட்சத்திரம்


ராணுவ அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராக அவர் செயல்படுவார்.


ராணுவம் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசுக்கு ஆலோசனை சொல்லும் ஒரே நபராக இருப்பார்.


ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு இடையே சிறப்பான நல்லிணக்கம் நிலவச்செய்வதில் அவர் கவனம் செலுத்துவார். நான்கு நட்சத்திரங்கள் கொண்டவராக இருப்பார்.


ராணுவ தளபதி பதவியில் இருந்து இன்று (டிசம்பர் 31) ஓய்வு பெற்றவுடன், முப்படை தலைமை தளபதி பதவியில் பிபின் ராவத் தொடர்கிறார். தற்போதைய ராணுவ துணைத்தளபதி மனோஜ் முகுந்த் நாராவனே புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார்.


முதல்முறையாக முப்படைகளுக்கும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள தலைமை தளபதி பதவியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

பணிகள் என்ன?

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. இது, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய 3 படைகள் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும். முப்படைகளுக்கான ஆயுதங்கள், தளவாட கொள்முதல்களையும் சட்டவிதிகள், நடைமுறைகளின்படி கவனிக்கும் பணிகளை மேற்கொள்ளும். இனி பாதுகாப்பு அமைச்சகம் 5 துறைகளை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு துறை, ராணுவ விவகாரங்கள் துறை, ராணுவ உற்பத்தி துறை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை, ஓய்வுபெற்ற படைவீரர்கள் நலன் ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்திலிருக்கும் துறைகளாகும்.

ராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு ஒரேமுனை ஆலோசகராக பிபின் ராவத் செயல்படுவார். ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படையை சிறந்த முறையில் ஒருங்கிணைப்பதில் இவர் கவனம் செலுத்துவார். வளங்களை உச்சக்கட்டமாகப் பயன்படுத்தி, ராணுவ காமாண்ட்களை ஒருங்கிணைத்து மறுகட்டமைத்து, செயல்பாட்டளவில் ஒருங்கிணைக்கும் பணிகளை இத்துறை செயல்படுத்தும்.

தற்போது நாட்டில் மொத்தம் 19 காம்ண்ட்கள் உள்ளனர். அவர்களை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைத்து செயல்படுத்துதல் முக்கிய பணியாகும். பணியாளர்களை தேர்வு செய்தல், பயிற்சி அளித்தல், சேவைப்பணிக்கு பயன்படுத்துதல் ஆகியவற்றில் தேவைக்கு ஏற்றார்போல் கூட்டாக திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள், ஆயுதங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்துதல்.

பாதுகாப்பு அமைச்சகத்தில் ராணுவத் தலைமையகம், கடற்படை தலைமையகம், தரைப்படைத் தலைமையகம், விமானப்படை தலைமையகம் ஆகியவை இருக்கும் நிலையில், தற்போது ராணுவ விவகாரத்துக்கும் தனியாக தலைமையகம் உருவாக்கப்படும்.