மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், விமானப்படையிலிருந்து 4 வீரர்கள் தேர்வு – இஸ்ரோ அறிவிப்பு

Read Time:4 Minute, 52 Second

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு விமானப்படையிலிருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் ரஷியாவில் சிறப்பு பயிற்சியை பெறவுள்ளனர் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது ஆற்றிய உரையில், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டத்தின்படி, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு 3 அல்லது 4 வீரர்களை அனுப்பவது இலக்காகும். இந்த திட்டத்தை இந்தியா நிறைவேற்றி சாதனை படைப்பதற்கு ரஷியா உதவிக்கரம் நீட்டுகிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ககன்யான்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘ககன்யான்’ திட்டத்தின்கீழ், விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வினியோகம் செய்கிறது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக திட்டத்தின் கீழ் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள வீரர்களுக்கான முதல்கட்ட தேர்வு நிறைவு பெற்றுள்ளது என கடந்த செப்டம்பரில் தகவல் வெளியாகியது. அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்காக ரஷியா, பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக முதலில் 2 ஆளில்லா விண்கலன்களும், மனிதர்களை கொண்டு செல்லும் ஒரு விண்கலமும் தயாரிக்கப்பட உள்ளன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட பின்னர், இரண்டு முறை ஆளில்லா விண்கலன்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்படும். பின்னர், மூன்றாவது முயற்சியில் வீரர்களுடன் கூடிய விண்கலம் அனுப்பப்படும்.

இந்த திட்டத்துக்காக விண்ணுக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கு ரஷியாவில் முறையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, மாஸ்கோவில் இஸ்ரோவின் தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்துள்ளது.

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள வீரர்களின் முதல்கட்டத் தேர்வு நிறைவடைந்தது. இந்த முதல்கட்ட தேர்வை இந்திய விமானப் படையின் விண்வெளி மருத்துவ நிறுவனம் செய்தது. கடுமையான உடல் திறன் பரிசோதனை, ஆய்வக பரிசோதனைகள், கதிர்வீச்சு பரிசோதனைகள், மருத்துவப் பரிசோதனை, மனோதிடப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் இந்த வீரர்களின் முதல்கட்ட தேர்வு நிறைவுவேறியதாக இந்திய விமானப் படையின் ஊடக ஒருங்கிணைப்பு மைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியது.

இந்நிலையில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு விமானப்படையிலிருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் ரஷியாவில் சிறப்பு பயிற்சியை பெறவுள்ளனர் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த 4 வீரர்களை தாங்கி செல்லும் விண்கலமானது, இந்தியாவின் சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.