10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் 2019-ல் விபத்துக்களால் 83 சிறுத்தைகள் சாவு

Read Time:5 Minute, 50 Second

இந்தியாவில் 2019 – ம் ஆண்டில் சாலை மற்றும் ரெயில் விபத்துக்களில் 83 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளது. இது, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.

டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WPSI) வெளியிட்டுள்ள தரவில், இந்தியாவில் 2019-ம் ஆண்டில் சாலை விபத்துக்களில் 73 சிறுத்தைகள் இறந்த நிலையில், 10 ரெயில் விபத்துக்களில் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக மராட்டியம் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு, விபத்துக்களில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் உயிரிழந்துள்ளது. இங்கு 22 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளது. சாலை விபத்துக்களில் 19 சிறுத்தைகளும், ரெயில் விபத்துக்களில் மூன்று சிறுத்தைகளும் உயிரிழந்துள்ளன.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2019-ல் 493 சிறுத்தை இறப்புகள் பதிவாகியுள்ளன, இது 2018-ம் ஆண்டைவிட 7 எண்ணிக்கை குறைவாகும். 2018-ம் ஆண்டில் சிறுத்தைகள் இறப்பு 500 ஆக இருந்தது.
2019-ம் ஆண்டில், 128 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டன; 36 கிராமவாசிகளால் கொல்லப்பட்டன; 160 இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன; 13 மீட்பு நடவடிக்கைகள் அல்லது சிகிச்சையின் இறந்தன; 16 சிறுத்தைகள் தற்செயலான மின்சாரம் தாக்கி உயிரிழந்தன; 48 மற்ற விலங்குகளுடனான (மற்ற சிறுத்தைகள் உட்பட) மோதலால் இறந்தன.

ரெயில் மற்றும் சாலை விபத்துக்கள் காரணமாக சிறுத்தைகளின் இறப்பு 2010-ல் 22 ஆக இருந்தது. இப்போது 2019 உடன் ஒப்பிடுகையில் 278 சதவீதம் உயர்ந்துள்ளது. 2018-ம் ஆண்டு விபத்துக்களால் 80 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன. இதுவே 2019-ல் 83 ஆக உயர்ந்து உள்ளது. 2017-ல் இதுபோன்று 63 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிறுத்தைகளுக்கு காக்கும் வகையில் குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கிடையாது. ஆனால் ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரெயில் பாதைகளை தெளிவாக தெரிந்துகொள்ள யானைகளை எச்சரிக்க அவர்கள் எச்சரிக்கை அலாரம்ங்களை அமைத்து உள்ளனர் என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

“2000 மற்றும் 2009 க்கு இடையில் சாலை மற்றும் ரெயில்வே காரணமாக சிறுத்தை இறப்பு ஆண்டுக்கு 20-ஐ தாண்டவில்லை. இருப்பினும், [அடுத்த] 10 ஆண்டுகளில் நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளது, மேலும் காடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் திட்டமிடப்பட்ட அதிக உள்கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என WPSI அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டிட்டோ ஜோசப் கூறுகிறார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய வனவிலங்கு வாரியம் (NBWL) 2019-ம் ஆண்டில் 90% க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு (சாலைகள், ரெயில்வே, ஒலிபரப்பு வழிகள் போன்றவை) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது என்று மதிப்பிட்டோம், இது சிறுத்தைகள் மற்றும் பிற விலங்குகளின் எதிர்காலத்தை மேலும் பாதிக்கும் என்கிறார் அவர்.

2019-ம் ஆண்டில் மராட்டியத்தில் 22 சிறுத்தைகள் இறந்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களை உத்தரகண்ட் (11 சிறுத்தைகள் இறப்புகள்), ராஜஸ்தான் (10 சிறுத்தைகள் இறப்புகள்), மத்தியப் பிரதேசம் (ஒன்பது சிறுத்தைகள் இறப்புகள்), கர்நாடகா (ஏழு சிறுத்தைகள் இறப்புகள்), குஜராத் (ஐந்து சிறுத்தைகள் இறப்புகள்) மாநிலங்கள் பிடிக்கிறது.

“எந்தவொரு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் வரைபடத்தை வரையும்போது பாதுகாப்பான விலங்கு வழிப்பாதை (சாலைக்கு மேல் பகுதியிலே, கீழ் பகுதியிலோ விலங்குகள் தடையின்றி,விபத்தின்றி நடமாடும் வகையில் வழிதடம் அமைப்பு) திட்டங்களையும் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட துறைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது,” என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் சிறப்பு செயலர் சித்தாந்த தாஸ் கூறியுள்ளார் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பரபரப்பான சாலைகள் மற்றும் ரெயில் பாதைகளில் பாதுகாப்பான குறுக்குவெட்டு பகுதிகள் தீர்வு நடவடிக்கைகளும் அடங்கும்.

வனவிலங்கு மண்டலங்களில் இருந்து சுமார் 10-15 கி.மீ தூரத்தில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்களில் வழியை அமைக்கும் வகையில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம்” என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) பொது மேலாளர் பி முகோபாத்யாய் கூறியுள்ளார்.