குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம், கேரளாவிற்கு அதிராம் கிடையாது…! விபரம்:-

Read Time:3 Minute, 24 Second

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. தென்னிந்தியாவில் எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது கேரளாவில்தான். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாநில சட்டசபையில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் அரசு சிறப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்று இருக்கிறது. ஆனால், மத்திய அரசு தரப்பில் மாநிலங்களுக்கு அதிகாரம் கிடையாது என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், குடியுரிமை உள்ளிட்ட மத்திய பட்டியலில் உள்ள பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட நாடாளுமன்றம் இயற்றுகிற சட்டங்களை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்பது அரசியல் சாசன கடமை ஆகும். நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டமும், பிராந்தியத்துக்கு புறம்பான செயல்பாட்டை கொண்டிருக்கும் என்ற அடிப்படையில் செல்லுபடியாகாது என்று கூறக்கூடாது. இதை அரசியல் சாசன சட்டம் பிரிவு 245 உட்பிரிவு 2 சொல்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சூளுரைப்பவர்கள் தகுந்த சட்ட கருத்தைப் பெற வேண்டும். அரசியல் சாசனத்தின்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டு அதிகாரத்துக்கு வருகிறவர்கள், அரசியல் சாசனத்துக்கு விரோதமான கருத்துகளை கூறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது என்றார். உண்மை என்னவென்றால் மாநிலங்களுக்கு குடியுரிமை விவகாரத்தில் அதிகாரம் கிடையாது.

அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் மத்திய அரசுப் பட்டியலில் குடியுரிமை, வெளிநாட்டவர் இடம்பெறுகிறது. இதில் இடம்பெறும் விவகாரங்களில் நாடாளுமன்றம் மட்டுமே சட்டம் இயற்ற முடியும். எனவே, அரசியலமைப்பு ரீதியாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை எதிர்க்க கேரள சட்டமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது, குடியுரிமை வழங்குவது என்பது மாநில விஷயம் கிடையாது என்பதே உண்மையாகும். குடியுரிமை மற்றும் அது தொடர்பான சட்டங்கள் மத்திய அரசின் வரம்புக்குள் மட்டுமே உள்ளது.