திருப்பதி லட்டு விலை உயர்கிறது… வைகுண்ட ஏகாதசி முதல் அமலுக்கு வருகிறது..!

Read Time:3 Minute, 57 Second

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது.

திருமலையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 3 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கோவில் இணையதளம் தெரிவிக்கிறது. திருப்பதியில் 17-ம் நூற்றாண்டில் லட்டு அறிமுகமாகிவிட்டாலும், 20-ம் நூற்றாண்டில்தான் பூரண பிரசாதமாக மாறியது என குறிப்பிடப்படுகிறது. திருப்பதி லட்டில் சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, லட்டு பிரசாதத்தை தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூடுதலாக செலவிடுகிறது. இதன் காரணமாக லட்டு விலை உயர்கிறது என தகவல்கள் வெளியானது, ஆனால் தேவஸ்தானம் மறுத்தது. தற்போது மானியம் ரத்தால் திருப்பதி லட்டு விலை உயர்கிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்கு ஒரு லட்டு பிரசாதம் தயார் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.38 செலவாகிறது.

நடைப்பயணமாக மலையேறி வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாகவும், தர்ம தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும் மலையேறி செல்லும் பக்தர்களுக்கும், ஒரு லட்டு ரூ.10 வீதமாக 2 லட்டுகளும், ஒரு லட்டு ரூ. 25 வீதமாக மேலும் 2 லட்டுகளும் வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 300 சிறப்பு தரிசனம், விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

இதனால் தேவஸ்தானத்துக்கு லட்டு விற்பனை மூலம் சிறிது நஷ்டம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறாது. மேலும், ரூ.50-க்கு தனி மையங்கள் அமைத்து அதன் மூலம் தற்போது பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில்தான் தேவஸ்தானம் சற்று லாபத்தை பார்க்கிறது.

ஒருவர்க்கு ஒரு லட்டு

இந்நிலையில், இனி திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இது வரும் வைகுண்ட ஏகாதசி முதல் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஒரு லட்டு ரூ. 50 என்ற விலையில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இனி லட்டு பிரசாதத்தின் மானியம் முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளது. ஒரு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திருப்பதி தேவஸ்தானம், லட்டு மீதான் பிற சலுகைகளை நிறுத்த உள்ளது.

மலையேறி திவ்ய தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஏற்கனவே ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 20 ஆயிரம் லட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் சுவாமியை சுமார் 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். அதன்படி, தினமும் 55 முதல் 65 ஆயிரம் லட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மற்றபடி கூடுதல் லட்டுக்கு இனி அனைவரும் ரூ.50-க்கு வாங்க வேண்டி வரும். இதன் மூலம் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.400 முதல் 450 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.