‘பாகிஸ்தானின் அட்டூழியங்கள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?’ காங்கிரசுக்கு பிரதமர் மோடி சரமாரி கேள்வி

Read Time:2 Minute, 34 Second

பாகிஸ்தானின் அட்டூழியங்கள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? காங்கிரசுக்கு பிரதமர் மோடி சரமாரியான கேள்வியை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கடுமையாக சாடினார், பாகிஸ்தானின் உண்மை முகத்தை ஏன் அவர்கள் வெளியே கொண்டுவரவில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.

கர்நாடக மாநில துமகூருவில் பிரதமர் மோடி பேசுகையில், “பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது, மத சிறுபான்மையினர் அங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். துன்புறுத்தப்பட்டவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் காங்கிரசும் அதன் நட்பு கட்சிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை, அதற்கு பதிலாக அவர்கள் இந்த அகதிகளுக்கு எதிராக பேரணிகளை நடத்தி வருகின்றனர் ” என்றார்.

“பாகிஸ்தானிலிருந்து வந்த ஒவ்வொருவரும் தங்களின் உயிரை காப்பாற்றவும், தங்கள் மகள்களின் உயிரை காப்பாற்றவும் வந்தவர்கள், இங்கு அவர்களுக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இவர்கள் (காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்) பாகிஸ்தான் இம்மக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்கள் பற்றி அமைதியாக இருப்பது ஏன்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

“நீங்கள் கோஷங்களை எழுப்ப வேண்டுமானால், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்படுவதை வெளிப்படுத்துவதற்காக அதனை செய்யுங்கள். நீங்கள் ஊர்வலத்தை மேற்கொள்ள வேண்டுமானால், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த சுரண்டப்பட்ட இந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக இதை செய்யுங்கள் ” என்றும் பிரதமர் மோடி பேசி உள்ளார்.