இந்திய திரைத்துறையின் உச்சபட்சமான ‘தாதா சாகேப் பால்கே விருது’ பற்றி தெரிந்துக்கொள்வோம்…

Read Time:5 Minute, 37 Second

இந்திய திரைத்துறையின் உச்சபட்சமான விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதாகும்.

இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கிய தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார். சினிமாவின் தந்தை உண்மையிலேயே சினிமாவின் தந்தைக்கான அவ்வளவு அற்புதமான அலாதியான குணங்களையும் கொண்டவர் என்பதே உண்மையாகும். எல்லோரிடத்திலும் அன்பு, எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் ஆளுமை, எவரும் ரசிக்கத்தகுந்த திறமை வெளிப்பாடு என்பதெல்லாம் சர்வசாதாரணமாக அவரிடம் குடிகொண்டிருந்ததால் அவருடைய சாதனை பயணம் சரியான இலக்கை அடைந்ததற்கு முக்கிய காரணமாகும். அவரைப்பற்றி சில தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.


தாதா சாகேப் பால்கே மராட்டிய மாநிலம் நாசிக் அருகே உள்ள திரயம்பகேஷ்வரில் 1870-ம் ஆண்டு பிறந்தார். அவருடைய இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே. தந்தை சமஸ்கிருத நிபுணர். பேராசிரியராக பணிபுரிந்தவர்.


மும்பை ஜே.ஜே.கலைக்கல்லூரியில் பால்கே 1885-ல் பலகலைகளையும் கற்றார். புகைப்பட கலை, ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி குறித்து பரோடாவில் உள்ள கலா பவனில் 1890-ல் பயின்றார். லித்தோகிராஃபி அச்சுக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர் பால்கே.


பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவுடன் இணைந்து பணியாற்றினார். கார்ல் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மன் மேஜிக் நிபுணரை சந்தித்து அவருடன் சில காலம் பணிபுரிந்தார். மேஜிக் ஷோக்கள் நடத்தினார்.


கிறிஸ்துவின் வாழ்வு என்ற திரைப்படத்தை கண்ட அவருக்கு, சினிமா ஆர்வம் தொற்றிக்கொண்டது. இதன்விளைவாக சினிமா தொடர்பான அத்தனை பத்திரிக்கைகளையும் படித்தார். திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார்.


திரைப்படம் பற்றி தெரிந்துகொண்டதும் சின்னச் சின்ன படங்கள் எடுக்க தொடங்கினார். பின்னர் இங்கிலாந்து வால்டன் ஸ்டுடியோவில் சினிமா தொழில்நுட்பம் கற்று தேர்ந்தார். தன்னுடைய பார்வை மங்கினாலும் சினிமா எடுப்பதில் ஆர்வம் குறையாமல் சிறப்பாக ஆர்வம் காட்டி செயல்பட்டார்.


நடிப்பதை பாவம் என்று கருதிய காலத்தில் அவருடைய படம் எடுக்கும் ஆர்வம் எளிதாக இலக்கை எட்டவில்லை. எதை எதையோ விற்று படம் எடுத்தார். குடும்பத்தினர், நண்பர்கள், தெரிந்தவர்களை என தனக்கு தெரிந்தவர்களை நடிக்கவைத்தார். அப்போது பெண் வேடங்களுக்கு ஆண்களை நடிக்கவைத்தார்.


சினிமா பற்றி தெரிந்தது அவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் அவரே மேற்கொண்டார். அவருடைய மனைவி அனைத்து விதங்களிலும் உதவினார்.


ஒருவழியாக 1913-ல் இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ‘ராஜா ஹரிச்சந்திரா’ வெளிவந்தது.


இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல்நபர் என்ற பெருமையை தனதாக்கினார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.


19 ஆண்டு சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட 95 திரைப்படங்கள், 26 குறும்படங்கள் தயாரித்து உள்ளார். இவற்றில் பெரும்பாலானவற்றை அவரே இயக்கிய படமாகும்.


திரைப்படத்துக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தாதாசாஹேப் பால்கே 74 வயதில் (1944) மறைந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் திரைத்துறை சாதனையாளர்களுக்கு இவரது பெயரிலான விருதை இந்திய அரசு 1969 முதல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.


1971-ல் இவருடைய உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது.


இவ்வாண்டு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது டிசம்பர் 29-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் இந்தியாவை தாண்டியும் இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக அறியப்படுபவர். திரைப்படத்துறையில் அமிதாப் செய்துள்ள வாழ்நாள் சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.