அமெரிக்க ஏவுகணை வீச்சில் ஈரான் தளபதி கொல்லப்பட்டார்… போர் பதற்றம்

Read Time:2 Minute, 41 Second

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான்.

ஈரானின் மூத்த தலைவரான அயாத்துல்லா அலி காமேனுக்கு அடுத்தபடியாக 2-வது அதிகாரம் படைத்த தலைவராக சுலைமான் பார்க்கப்பட்டார்.

அமெரிக்கா ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணையை வீசியது. இதில், குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி என்ற துணை ராணுவப்படையின் துணை தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸ் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

ஈரானுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுத்துவந்த அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா சொல்வது என்ன?

குவாசிம் சுலைமானை ஏவுகணை தாக்குதல் மூலம் கொலை செய்தோம் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க உயரதிகாரிகள், தூதரக அதிகாரிகள், வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு ஜெனரல் சுலைமான் திட்டமிட்டங்கள் வகுத்து வந்ததாக தகவல்கள் கிடைத்தன. எனவே, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டோம் என அமெரிக்கா கூறியுள்ளது.

பின்னணி விபரம்:-

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே மோதல் காணப்படும் நிலையில் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்காவை சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்கு பதிலடியாகவே அந்த படையினர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை டிசம்பர் 31-ம் தேதி கடாயெப் ஹிஸ்புல்லா ஆதரவாளார்கள் சூறையாடினர். இதற்குப் பதிலடி தரும் வகையில், அமெரிக்கா இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், அங்கு கடும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.