பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு யோகி அரசு வலியுறுத்தல்…

Read Time:5 Minute, 26 Second

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) இஸ்லாமிய அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை உ.பி. மாநில பா.ஜனதா அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது கேரளாவை அடுத்து உத்தரபிரதேச மாநிலத்திலும் எழுந்துள்ளது. எஸ்டிபிஐ, பி.எப்.ஐ.யின் அரசியல் அமைப்பாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இந்த அமைப்புதான் வன்முறைக்கு வித்திட்டது என உத்தரபிரதேச மாநில அரசு குற்றம் சாட்டி பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

உத்தரபிரதேச டிஜிபி இதுதொடர்பாக பேசுகையில், வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளை சேர்ந்த 23 பிஎப்ஐ செயற்பாட்டாளர்களை மாநில காவல்துறை கைது செய்துள்ளது, போராட்டத்தின்போது வன்முறைக்கு தூண்டியது யார் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ. உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்கு குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைத்துள்ளன, ஆனால் இந்த நேரத்தில் அதை வெளியிடமுடியாது என்றார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

உ.பி. அரசின் புகாரின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது என்றும் உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்ளிட்ட பிற மத்திய அரசு நிறுவனங்களிடமிருந்தும் சில ஆதாரங்களை பெற வாய்ப்புள்ளது என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இது சர்ச்சைக்குரிய அமைப்பை தடை செய்வதற்கான செயல்முறையின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பி.எப்.ஐ.க்கு தடை விதிக்க மாநில அரசு கடுமையாக ஆதரவளிக்கிறது. ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு 2001-ல் தடைசெய்யப்பட்ட, இந்திய இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) ஒரு மறுசுழற்சியாக தோன்றிய அமைப்புதான் இதுவாகும்.

பல சிமி செயற்பாட்டாளர்கள் இப்போது பி.எப்.ஐ.யில் உள்ளனர். மேலும் மாநிலத்தில் வன்முறையை தூண்டி வருகின்றனர். அண்மையில் நடந்த போராட்டங்களின் போது அவர்களது உறுப்பினர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் உட்பட ஏழு மாநிலங்களில் பி.எப்.ஐ செயல்பட்டு வருகிறது என்றார். இதேபோன்று, கர்நாடக மாநிலம் மங்களூரு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களிலும் இவ்வமைப்பு மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வமைப்பு ஏற்கனவே தேசிய புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில், “பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கேரள போலீஸ் வலியுறுத்தியது,” என அப்போதைய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியிருந்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு கேரள மாநிலம் மூவாத்துபுழாவில் பேராசிரியர் டி.ஜே ஜோசப் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது புகார் கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் 1977-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சிமி இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டது தெரியவந்தது. பல்வேறு பயங்கரவாத செயலிலும் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, கடந்த 2001-ல் சிமி இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த மத்திய அரசு, முதல் முறையாக தடை விதித்தது. அதன்பிறகு அவ்வப்போது தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பி.எப்.ஐ. வெளியிட்ட செய்திகுறிப்பில், யோகி ஆதித்யநாத் அரசின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அபத்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.