மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை ரோஹிங்கியாக்களை வெளியேற்றுவது…!

Read Time:3 Minute, 34 Second

மியான்மரிலிருந்து வந்த ரோஹிங்கியாக்கள் வெளியேற்றப்படுவார்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பிரதம அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஜனவரி 3-ம் தேதி பேசுகையில், “ ரோஹிங்கியாக்கள் மியான்மரை சேர்ந்தவர்கள் என்பதால் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் வரவில்லை. மத்திய அரசு அடுத்த கட்டமாக ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை இந்தியாவில் இருந்து நாடு கடத்த நடவடிக்கையை மேற்கொள்ளும்,” எனக் கூறியுள்ளார்.

மியான்மரில் இருந்து வந்த பல ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஜம்முக்கு குடிபெயர்ந்துள்ளனர். அத்தகைய நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளும் சேகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி இந்தியாவில் 40,000 ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர், 14,000 ரோஹிங்கியா அகதிகள் மட்டுமே ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்து இங்கு உள்ளனர்.


#CAA குடியுரிமை சட்டம் ஒரு இஞ்ச் கூட பின்வாங்கப்போவது இல்லை… அமித்ஷா திட்டவட்டம்…


இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா 2017 முதல் ரோஹிங்கியா உட்பட 22 மியான்மர் நாட்டினரை நாடு கடத்தியதாக உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்து இருந்தது.

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை மியான்மருக்கு அனுப்புவோம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதனையடுத்து ரோஹிங்கியாக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தங்களுடைய வாழ்க்கை நிலைக்குறித்து மனுக்களை தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுக்கள் ஜனவரி 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்தனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு இவர்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. இஸ்லாமியர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறினர். சிலர் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் 6 லட்சம் பேர் மியான்மரில் இருப்பது இன அழிப்புக்கான ஆபத்து என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.