வைகுண்ட ஏகாதசியின் போது பெருமாளின் மோகினி அலங்கார தத்துவம்

Read Time:1 Minute, 59 Second

வைணவத் திருத்தலங்களில் நடைபெறக்கூடிய முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பகல் பத்து, இராப்பத்து என மொத்தம் 21 நாள்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகல்பத்தின் கடைசி நாள் பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். தன்னை தரிசிக்க வருபவர்கள் மம மாயா துரத்யமா எனப்படும் தன்னுடைய மாயையை கடப்பது சவாலானது. அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. இந்த மூன்றிலும் பெண்ணாசையை ஒழிப்பதுதான் மிகவும் கடினம்.

ஏன்னென்றால் ஒரு ஜீவன் சரீரம் எடுக்க ஆரம்பித்த காலம் முதலே பெண்ணாசை இருந்து வருகிறது.

மனிதன் வாழ்வில் பெண்ணாசையை வெல்வது கடினம். திருப்பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை அசுரர்களுக்கு கிடைக்காமல் செய்வதற்காக திருமால் மோகினி வேடம் தாங்கினார். அதில் மயங்கிய அசுரர்கள் அமிர்தத்தை இழந்தனர். பெண்ணாசையால் மதி இழக்காமல் இறைவன் காட்டிய மார்க்கத்தில் சென்றால் வைகுண்டம் நிச்சயம் என்பதை பக்தர்களுக்கு ரெங்கநாதர் உணர்த்துகிறார். இதுவே மோகினி அலங்கார தத்துவமாகும்.

பெருமாள் பூண்டிருக்கும் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மயங்கியதால் அசுரர்கள் அமிர்தத்தை இழக்க நேரிட்டது. ஆகையால், பக்தர்களும் (பக்தர்கள்) மாயையில் மயங்காமல் நம்பெருமாளை பின்தொடர்ந்து சென்றால் சொர்க்கவாசலை (பரமபதவாசல்) அடையலாம் என்ற கருத்தை கூறுவது தான் மோகினி அலங்காரத்தின் சிறப்பு.