சுலைமான் கொலை: அமெரிக்காவிற்கு ஆதரவு… ஈரானிடம் வசமாக சிக்கும் பாகிஸ்தான்…!

Read Time:2 Minute, 41 Second

ஈராக்கில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான் கொல்லப்பட்டார்.

மத்திய கிழக்கில் போர் வியூகத்தில் கில்லாடியான சுலைமான் ஈரானுக்கு முக்கிய பாதுகாப்பு கேடயமாக இருந்தார். இப்போது அவருடைய இறப்பு வளைகுடா நாடுகளுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

ஈரான், அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான், அமெரிக்கா இடையிலான மோதலில் பெரும்பாலான அரபு நாடுகள் தங்களை விலக்கிக்கொண்டு உள்ளது. யாருக்கும் ஆதரவை தெரிவிக்கவில்லை. ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானை ஏவுகணை தாக்குதல் மூலம் கொலை செய்யும் முன் எங்களிடம் அமெரிக்கா ஆலோசிக்கவில்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துவிட்டது.

இப்போது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் ஈரானை மேலும் கோபப்படுத்தும் செயலில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. பாகிஸ்தான், சுலைமான் கொலையில் அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. அதாவது, பலுசிஸ்தானில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக சுலைமான் தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்தார் என பாகிஸ்தான் பார்க்கிறது. இப்போது அவர் இறந்துவிட்டார் என்பது சாதகமான தகவலாக பார்க்கிறது. இதற்கிடையே அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்ததால் மற்றொரு லாபமும் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு பயிற்சியளிப்பு, ராணுவ ஒப்பந்தத்தை அமெரிக்கா புதுப்பிக்க வந்துள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானை ஈரான் பலமுறை பயங்கரவாத விவகாரத்தில் எச்சரித்துள்ளது. இந்தியாவுடன் வர்த்தக உறவை துண்டித்த பாகிஸ்தான் கையேந்தும் நாடுகளில் முக்கியமான நாடு ஈரான். இப்போது, கோபத்தில் உள்ள ஈரானுக்கு பாகிஸ்தான் செயல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, பாகிஸ்தானுக்கும் அடி கொடுக்கும் என பார்க்கப்படுகிறது.