அமெரிக்கா வீரர்களின் முகாம், தூதரகம் மீது ஏவுகணை வீச்சு… கூடுதல் படைகளை அனுப்புகிறது

Read Time:2 Minute, 56 Second

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் முற்றியுள்ள நிலையில், ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் இருந்த முகாம் மீதும் அந்நாட்டு தூதரகம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளது.

ஈரான் ராணுவத் தளபதி சுலைமான் ஈராக்கில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டது முதல் ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா இதற்காக நிச்சயம் பழிவாங்கப்படும் என்று ஈரான் சபதம் ஏற்றது. பதற்றம் அதிகரித்து வருவதை தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்புகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.


ஈராக்கிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு!


இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், “அமெரிக்கா மக்களை மிரட்ட ஈரான் திட்டமிட்டிருக்கிறது. எனவே மத்திய கிழக்குப் பகுதிகளில் 3,000 வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட உள்ளனர். இது பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதச் சோதனை தொடர்பான ஒப்பந்தத்தில் விலகியதிலிருந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது. இப்போது சுலைமான் கொல்லப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் முகாம் மற்றும் அமெரிக்க தூதரகம் இருக்கும் பகுதியில் இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளது என அங்கிருந்து வெளிவரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளது. பாக்தாத்தில் உள்ள பலாத் விமானப்படை தளத்தில்தான் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் வீரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளது. இதற்கிடையே அடுத்தடுத்து ஏவுகணை அங்கு வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் பாதுகாப்பு தரப்பு தகவல்களும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது என சர்வதேச மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹிஸ்புல்லா இயக்கம் அமெரிக்க படைக்கு பதிலடியை விரைவில் கொடுப்போம் என எச்சரிக்கையை இன்று விடுத்திருந்தது. இந்நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நேரிட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.