நெல்லை நவ திருப்பதி பெருமாள் கோவில்களில் இரவில் திறக்கப்படும் சொர்க்கவாசல்..!

Read Time:2 Minute, 23 Second

பொதுவாக பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் தான் திறக்கப்படும். ஆனால் நெல்லை மாவட்டம் நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம், வரகுணமங்கை (நத்தம்), திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று இரவு 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும்.

பின்னர் இந்த கோவில்களில் இருந்து மாலைகள் ஆழ்வார் திருநகரியில் உள்ள பன்னிரு ஆழ்வார்களில் முதல்வரான நம்மாழ்வார் சன்னதிக்கு எடுத்து செல்லப்படும். அங்கு நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்படும். அதன்பின்னர் விசே‌ஷ பூஜைகள் நடத்தப்பட்டு மறுநாள் (துவாதசி) காலை 5 மணி அளவில் ஆழ்வார் திருநகரி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.


அதேபோல் ராமநாதபுரத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியன்று இரவில் தான் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

திருப்பாற்கடல் பெருமாள் கோவில்

108 திவ்ய தேசங்களில் 106 திவ்ய தேசங்கள் மட்டும் பூமியில் உள்ளன. 107–வது திவ்ய தேசம் திருப்பாற்கடல். 108–வது திவ்ய தேசம் வைகுண்டம் ஆகும். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்திப்பெற்றது. சிவலிங்கத்தின் மீது பிரசன்ன பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தரும் அற்புத தலம் இது. அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் உள்ள இந்த கோவிலை தரிசித்தால் திருப்பாற்கடலை தரிசித்த பலன் கிடைப்பதாகவும், பாவங்கள் அனைத்தும் விலகுவதாகவும் தலபுராணம் கூறுகிறது.