Tamil News, Tamil seithigal, Tamil News Online, Tamil News | Latest Tamil news | Tamilnadu news | தமிழ் செய்திகள் | Tamil News online | Tamil News website – The Madras Post
முன்னொரு காலத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தினான். அவன் செய்த கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமானோ, அவர்களை திருமாலிடம் சென்று முறையிடும்படி கூறினார். அதன்படியே தேவர்களும், முனிவர்களும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலை சந்தித்தனர்.
காக்கும் தெய்வமான அந்தக் கருணைக் கடவுள், தேவர்களோடு சேர்ந்து முரனை எதிர்த்து போரிட்டார். போரால் களைப்படைந்த திருமால், பத்ரிகாசிரமம் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் பள்ளிகொண்டார். அந்த இடத்திற்கு, திருமாலை தேடிவந்த முரன், பள்ளிகொண்டிருந்த திருமாலை கொல்ல நினைத்து உடைவாளை உருவினான். அப்போது திருமாலின் உடலில் இருந்து ஒரு பெண் தோன்றி, முரனை அழித்தாள். இது நடந்தபின் கண் விழித்த திருமால், அந்தப் பெண்ணைப் பாராட்டி, அவளுக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டார்.
ஏகாதசி என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், திருமாலிடம் வரம் ஒன்றைக் கேட்டாள். ‘ஏகாதசி அன்று தங்களை (திருமால்) நினைத்து நல்ல மனதுடன் யார் விரதம் இருக்கிறார்களோ, அவர்களைக் காத்தருள வேண்டும்’ என்று வேண்டினாள். அன்று முதல் இந்த விரதம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புராண கதைகள் தெரிவிக்கின்றன. எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து ஸ்ரீநாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று இனிதே வாழ்வோம் என்பது ஐதீகம்.
திரு ரங்கம் தங்க கோபுரம்
மாதந்தோறும் ஏகாதசி உண்டு என்றாலும் மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. இந்நாளில் வைணவ கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும். பெருமாள், பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்ஸவமாக சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது.
நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னை தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் எல்லா பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டினார். பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது. திருமால் வழிபாடு செய்து, குறைவற்ற வாழ்வை வாழ்வோம்.
வைகுண்ட ஏகாதசி அன்று, விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படுகிறது. இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.