யார் இந்த சுலைமான்? உதவியவரையே போட்டு தள்ளியது அமெரிக்கா… எப்படி…?

Read Time:5 Minute, 50 Second

ஈரான் புரட்சிகர படையின் தளபதி (குவாட்ஸ் படை) குவாசிம் சுலைமானை அமெரிக்கா ஈராக்கில், ஏவுகணைகளை வீசி கொலை செய்துள்ளது.

1979 ஆண்டில் ஈரானிய புரட்சியில் மன்னர் முகமது ரீசா ஷா பஹ்லவி (அமெரிக்கா ஆதரவுப்பெற்ற ஒரு சர்வாதிகாரி) ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், அந்நாட்டின் புரட்சிகரப்பாதுகாப்பு படையில் இணைந்தவர் சுலைமான். பின்னர் ஈராக் போரில் சிறப்பாக செயல்பட்டார். மத்திய கிழக்கில் ஈரானிய செல்வாக்கு பரவுவதில் அவர் முக்கிய நபராக செயல்பட்டார். போர் வியூகத்தில் சிறப்பாக செயல்படுபவர். இவரால்தான் அமெரிக்காவும், ஈரானின் பிராந்திய எதிரிகளான சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஒருகட்டுக்குள்ளே இருந்தது. இவரை கொலை செய்ய மேற்கத்திய நாடுகளும், இஸ்ரேலிய மற்றும் அரபு அமைப்புகள் பலமுறை முயற்சி செய்தது. இப்போது இவருடைய இழப்பு ஈரானுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

ஈரானின் எல்லைகளுக்கு அப்பால் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பணிபுரிவது குவாட்ஸ் படையாகும். சிரியா மற்றும் ஈராக்கில் சமீபத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடிக்க ஆயுதக் குழுக்களுக்கு இப்படை உதவியது. வெளிநாடுகளில் உளவுரீதியாக செயல்படும் படையாகும். உலக நாடுகளில் உள்ள பல ஈரானிய தூதரகங்களில் இப்படைக்கு அலுவலகங்கள் உள்ளன, அவை வெளியே தெரியாதவகையில் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. குவாட்ஸ் படையின் தலைவராக 1998-ம் ஆண்டு சுலைமான் பொறுப்பு ஏற்றார். இப்படையை அமெரிக்க பயங்கரவாத படையென்றும் குற்றம் சாட்டுகிறது.

தற்போது அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றுள்ள சுலைமான், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரடி அமெரிக்காவிற்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அல்-கொய்தா பயங்கரவாதிகள், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாட வழியின்றி அமெரிக்கா நின்றது. ஏற்கனவே பகை காரணமாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் தூதரக ரீதியில் உறவு கிடையாது. இருப்பினும் சுலைமான் உதவுவதற்கு முன்வந்தார். தலீபான் மற்றும் அல்-கொய்தாவிற்கு எதிராக போரிட உதவியை அமெரிக்கா கோரியபோது, சம்மதம் தெரிவித்து வழியை ஏற்படுத்தி கொடுத்தார். அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை தண்டிக்க அமெரிக்கா விரும்பியது. மறுபுறம் அதேநேரத்தில் ஷியா ஆப்கானியர்களை குறிவைத்த தலீபான்களை தண்டிப்பதற்கு சுலைமான் விரும்பினார். இதன் காரணமாக உதவ முன்வந்தார். தலிபான்கள் மீதான தாக்குதலுக்கு வியூகங்களை ஈரான் அமெரிக்காவிடம் வழங்கியது.

அப்போது, தலிபான்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கூடுதல் காலம் எடுத்தது. இதனால் ஒருகட்டத்தில் கோபம் கொண்ட ஈரானின் குவாட்ஸ் படை இதுதான் வரைபடம், இதுதான் தலிபான்களின் தளங்கள் வேண்டுமென்றால் தாக்குதல் நடத்திக்கொள்ளுங்கள் என கோபத்தில் ஆவணங்களை வீசிவிட்டது. இதனைவைத்துதான் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தியது. அப்போதுதான் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானுக்குள் தலைமறைவாகிவிட்டார். 2011-ம் ஆண்டு அமெரிக்கா பின்லேடனை வேட்டையாடியது.

தலிபான் மற்றும் அல்-கொய்தாவை ஒடுக்குவதற்கு ஒரு பாதையை அமெரிக்க படைகளுக்கு காட்டியது சுலைமான். ஆனால், அமெரிக்கா தலிபான் மீது குண்டுவெடிப்பை தொடங்கிய மூன்று மாதங்களுக்கு பிறகுதான், அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் ஈரானையும், சுலைமானையும் எதிரியாக மாற்றினார். 2019 ஏப்ரல் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் ஈரானிய புரட்சிகரப் படையின் குவாட்ஸ் படையை பயங்கரவாத அமைப்பு என்றது, இப்படையுடன் தொடர்புடைய மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்தது. இப்போது சுலைமானை தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது. ஆக மொத்தத்தில் தனக்கு உதவியவரையே அமெரிக்கா போட்டுதள்ளியுள்ளது.

மற்றொரு நாட்டை தாக்குவது என்பது அமெரிக்காவிற்கு ஒன்றும் புதியது கிடையாது. இப்போது மத்திய கிழக்கில் தனக்கு சவாலாக விழங்கும் ஈரானின் தலைவரை கொன்றுள்ளது. அமெரிக்காவின் இச்செயல் ஈரானை இப்போது முழு கோபத்திற்கு தள்ளியுள்ளது. அமெரிக்காவிற்கு மூர்க்கத்தனமாக பதிலடியை கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கையை விடுத்துள்ளதால், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.