குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பா.ஜனதா பேரணி, ஒதுங்கும் கூட்டணி கட்சிகள்

Read Time:2 Minute, 13 Second

வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்துவந்த இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.

மத்திய அரசு மதம் ரீதியாக பேதம் காட்டுகிறது, இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. தமிழகத்தில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டம் மேற்கொண்டன. இதற்கிடையே சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜனதா தரப்பிலும் பேரணிகள் நடத்தப்படுகிறது.

தமிழகத்திலும் ஜனவரி 7-ம் தேதி மிகப்பெரிய பேரணியை மேற்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் பேரணியில் மத்திய அமைச்சர்கள் கலந்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அல்லது ராஜ்நாத் சிங் சென்னையில் 7-ம் தேதி நடக்கும் பேரணியில் கலந்துக்கொள்ளலாம். பா.ஜனதா தலைவர் ராம் மாதவ் திருச்சியில் 9-ம் தேதி நடைபெறும் பேரணியில் கலந்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானி மதுரையில் 9-ம் தேதி நடைபெறும் பேரணியிலும் ஆர்.பி.சிங் ஈரோட்டில் ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் பேரணியிலும் கலந்துக்கொள்ள பா.ஜனதா தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பா.ஜனதா கூறியுள்ளது.

ஆனால், இந்த பேரணியில் கலந்துக்கொள்வதில் அதன் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாமக ஒதுங்கி நிற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் கலந்துக்கொள்ள இருகட்சிகளுக்கும் விருப்பம் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளது.