அமெரிக்க படைகளை வெளியேற்ற ஈராக் தீர்மானம், பொருளாதார தடை – டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

Read Time:2 Minute, 42 Second

அமெரிக்க படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் பொருளாதாரத் தடைகளுக்கு ஈராக் ஆளாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானை உயிரிழந்தார். சுலைமான் கொல்லப்பட்டதற்கு ஈராக்கிலும், ஈரானிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கப்படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஈராக்கில் வலுப்பெற்றது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டுவர தீர்மானம் செய்தனர். இதனை தொடர்ந்து வெளிநாட்டு படைகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அரசு அழைப்புவிடுத்த தீர்மானம் ஒன்றுக்கு ஈராக் நாடாளுமன்றம் சாதகமாக வாக்களித்தது. ஈராக்கின் நிலப்பகுதி, வான்பகுதி மற்றும் நீரை வெளிநாட்டு படைகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“ஈராக்கில் ராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டது, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றியடைந்துவிட்டோம். எனவே, சர்வதேச படைகளின் உதவிக்கான கோரிக்கையை ரத்து செய்வதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது,” என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டுரம்ப் கூறும்போது, “பல பில்லியன் டாலர் மதிப்பிலான விலை உயர்ந்த விமான தளங்களை கட்ட அமெரிக்கா அளித்த பணத்தை ஈராக் திரும்ப அளிக்கும்வரை அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறாது. எங்கள் படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் நாங்கள் அவர்கள் இதற்கு முன்னர் பார்த்திருந்த வகையில் பொருளாதார தடைகளை விதிப்போம் ” என்றார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் ஏற்கனவே போரில் சிக்கி சின்னாப்பின்னமான ஈராக்கும் சிக்கியுள்ளது.