என்னுடைய மனசாட்சியின்படி செயல்படுகிறேன் டுவிட்டர் விமர்சகர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி..!

Read Time:2 Minute, 51 Second

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘Resurgent Bharath’ நிகழ்ச்சி சென்னயில் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அக்சன்சர் நிறுவனத்தின் சென்னை பிராந்திய செயல்தலைவர் ராமா எஸ் ராமச்சந்திரன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சிக்கு விருந்தினர் பட்டியலில் ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அக்சன்சர் ராமச்சந்திரன் பெயர் இடம்பெற்றுள்ளதற்கு டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்காக ஸ்ரீதர் வேம்பு மற்றும் ராமச்சந்திரனை பலர் டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். உங்களுடைய தயாரிப்பு பொருட்களை நாங்கள் புறக்கணிப்போம் என கூறும் டுவிட்டர்வாசிகள், பிறரையும் அதனை புறக்கணிக்குமாறு அழைப்புக்களை விடுத்து வருகின்றனர். மறுபுறம் இருவருக்கும் ஆதரவாகவும் டுவிட்டரில் கருத்து பதிவு செய்யப்படுகிறது.

இது குறித்து அதிகமானோர் கருத்து தெரிவிக்க தொடங்கியதும் ஸ்ரீதர் வேம்பு டுவிட்டர் தாக்குதல்களின் அடிப்படையில் தனது கருத்துக்களை தீர்மானிக்கவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

“டுவிட்டர் தாக்குதல்களின் அடிப்படையில் எனது கருத்துக்களை நான் தீர்மானிக்கவில்லை. நான் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், தயவுசெய்து உங்கள் மனசாட்சி சொல்லுவதை செய்யுங்கள், நான் என்னுடைய மனசாட்சி என்ன சொல்கிறதோ அதன்படி நான் செய்ல்படுவேன். வேலையின் காரணமாக தினசரி தேவைக்கு சம்பாதிக்கிறோம், நாங்கள் தொடர்ந்து தரமான வேலைகளை செய்வோம். தாக்குதல்களுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். ” என டுவிட்டரில் ஸ்ரீதர் வேம்பு பதில் கொடுத்துள்ளார்.


அவருடைய பதிலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். “உங்களுடைய மனசாட்சி என்ன சொல்கிறதோ, அதனையே செய்யுங்கள்,” என தெரிவித்துள்ளனர். சிலர் மதரீதியாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு டுவிட்டரில் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.