சமூக வலைதளங்களில் வெளியான ராமேசுவரம் கோவில் கருவறைப் படம், பணத்துக்காக ஆகம விதிகள் மீறல்

Read Time:4 Minute, 44 Second

சமூக வலைதளங்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைப் படம் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைப் பட விவகாரத்தில் பணத்துக்காக ஆகம விதிகளை மீறினாரா குருக்கள்? என கேள்வி எழுந்துள்ளது.

ராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவ தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத்தன்மை உடையதாக கருதப்படும் கோவில்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும், ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமைகளாகக் கருதப்படுகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்ற தலம் ராமேஸ்வரம்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே, வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான ராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் ராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாகத் திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம், சுவாமி சந்நதியின் முதல் கிழக்குப் பிராகாரத்தில் உள்ள சிறிய சந்நிதியில் இருக்கிறது.

ராமபிரான் (வைணவம்) ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் (சைவத்தை) பிரதிஷ்டை செய்தார் என்பதால் சைவ, வைணவ மதத்தினர் இருவரும் வந்து கூடி வழிபடும் இடமாகவும் இருப்பதால் இந்தியாவில் உள்ள இந்து கோவில்களில் ராமேசுவரம் மிக முக்கிய சிறப்பை பெற்றுள்ளது. ராமபிரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இங்குள்ள சிவலிங்கத்துக்கு சிருங்கேரி சங்கராச்சாரியரிடம் தீட்ஷை பெற்ற குருக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். இவர்களை தவிர சிவலிங்கம் அமைந்துள்ள கருவறைக்குள் செல்ல சிருங்கேரி சங்கராச்சாரியர் மற்றும் நேபாள மன்னருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

மேலும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான சிவலிங்கத்தை படம் எடுக்கக் கூடாது என விதிகள் உள்ளன.

இந்நிலையில் மூலவரான சிவலிங்கத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இரண்டு நாட்களாக வைரலாகி வரும் இந்த படத்தை வடமாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்காக ஆலயத்தின் கருவறையில் பணியாற்றும் குருக்கள் ஒருவர் தனது செல்போன் மூலம் படம் எடுத்து கொடுத்து அதற்காக அந்தப் பக்தரிடமிருந்து பெரும் தொகையை கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆகம விதிகளை மீறி ராமநாதசுவாமி கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்த ஆலய குருக்கள் மீதும் இதற்கு துணையாக இருந்தவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்திடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு சாமியை தரிசனம் செய்வதற்காக செல்கிறோம். அதனை செய்யுங்கள், கருவறைக்குள் புகைப்படங்களை எப்பதை தவிருங்கள். கோவிலுக்கு சென்றதும் செல்போனை எடுத்து புகைப்படம் எடுப்பதைதான் வேலையாக வைத்திருக்கிறார்கள். சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது வெளியான வீடியோக்களே இதற்கு சான்றாகும். சாமியை கும்பிடுவதற்கு பதிலாக செல்போனில் வீடியோ எடுப்பதை மட்டுமே வேலையாக பலர்வைத்து உள்ளனர். அவர்கள் தங்களுடைய நடவடிக்கையை மாற்றிக்கொள்வது நல்லது.