டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட நீதிமன்றம் ‘கறுப்பு வாரண்ட்’பிறப்பிப்பு

Read Time:4 Minute, 16 Second

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று கூடுதல் செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தியாவையே உலுக்கிய இந்த பாலியல் பலாத்கார சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு ஓடும் பஸ்சில் நடைபெற்றது. இவ்வழக்கில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விரைவு கோர்ட்டு குற்றவாளிகள் முகேஷ், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை 2014-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம், 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தன. முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அக்‌ஷய் தாக்குர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை கடந்த டிசம்பர் 18-ந் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் நிர்பயாவின் பெற்றோர் மற்றும் டெல்லி அரசு ஆகியோர் சார்பில் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

விசாரணையின் போது 4 குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளார்களா? என்பதற்கு திகார் ஜெயில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கையில், இந்த வழக்கு தொடர்பான மனு எதுவும் எந்த கோர்ட்டிலோ அல்லது ஜனாதிபதியிடமோ இப்போது நிலுவையில் இல்லை. மறுஆய்வு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனவே குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையே குற்றவாளிகள் விரும்பினால் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று வாதாடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார் அரோரா, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் தாக்குர் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அவர்களை வருகிற 22-ந் தேதி காலை 7 மணிக்கு திகார் ஜெயிலில் தூக்கிலிட வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ‘கறுப்பு வாரண்ட்’ என்று அழைக்கும் வழக்கம் நீதித்துறையில் உள்ளது. ஆனாலும் குற்றவாளிகள் மேல்முறையீடு அல்லது கருணை மனு தாக்கல் செய்தால் இந்த உத்தரவை நிறுத்திவைக்கவோ அல்லது ரத்துசெய்யவோ வாய்ப்பு உள்ளது.

கோர்ட்டின் உத்தரவு குறித்து நிர்பயாவின் தாயார் பேசுகையில், “இந்த உத்தரவு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பலப் படுத்துவதாகவும் உள்ளது” என்றார். இதற்கிடையே குற்றவாளிகளின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.