ஏவுகணைகள் வீச்சு ‘எங்களுக்கு நட்புநாடான இந்தியா உதவவேண்டும்’ ஈரான் கோரிக்கை

Read Time:2 Minute, 13 Second

ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படை தளங்கள் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான் இந்தியாவின் உதவியை கோரி உள்ளது.

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதை அடுத்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதனால், இருநாடுகளுக்கு இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுலைமானி கொல்லப்பட்டதற்கான பழிவாங்கும் செயல்தான் இது என ஈரான் கூறியுள்ளது, அமெரிக்காவை மேலும் சீண்டி உள்ளது. இதனால் விரைவில் அமெரிக்கா தரப்பில் நடவடிக்கையிருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படை தளங்கள் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான் இந்தியாவின் உதவியை கோரி உள்ளது. புதுடெல்லியில் ஈரான் தூதகரத்தில் குவாசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய தூதர் அலி செகேனிம் இந்தியா உதவ வேண்டும் என்றார்.

அவர் பேசுகையில், “உலக அமைதிக்கு இந்தியா மிகச்சிறந்த பங்கை கொண்டுள்ளது. இந்தியா இந்த ஆசியப் பிராந்தியத்தை சேர்ந்தது. தற்போது, பதற்றத்தை அனுமதிக்காமல் அமைதிக்காக அனைத்து நாடுகளின் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம், குறிப்பாக இந்தியாவின் முயற்சியை நாங்கள் கோருகிறோம். இந்தியா எங்களுக்கு மிகவும் நல்ல நட்பு நாடாகும். நாங்கள் போரை விரும்பவில்லை.

பிராந்தியத்தில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படவேண்டும். உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்தியா எந்த ஒரு முயற்சி அல்லது திட்டத்தை முன்னெடுத்தால் நாங்கள் வரவேற்போம்,” எனக் கூறியுள்ளார்.