ஈரான், ஈராக் மீது விமானங்கள் பறக்க இந்தியா தடை; இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

Read Time:2 Minute, 21 Second

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மேலும் வலுத்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் விமானம் விபத்தில் சிக்கி 170 பேர் உயிரிழந்துவிட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஏவுகணை தாக்குதலில் விமானம் விபத்தில் சிக்கியதா? இல்லை தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியதா? என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் கோபம் கூடுதலாகியுள்ளது.

இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பின்னர் ஈராக், ஈரான், ஓமான் வளைகுடா மற்றும் ஈரான்-சவுதி அரேபியா இடையேயான நீர்நிலைகள், வான்வெளியில் அமெரிக்க விமானங்கள் இயங்குவதை தடை செய்வதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபோன்று இந்திய விமானங்கள் ஈரான், ஈராக், வளைகுடா வான்பகுதிக்குள் செல்லவேண்டாம் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அது போல் தேவையின்றி இந்தியர்கள் ஈராக் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஈராக்கில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மேலும் அறிவிக்கும் வரை ஈராக்கிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஈராக்கிற்குள் பயணிப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கும். ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு தூதரக உதவிகள் உடனடியாக செய்யப்படும். ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.