சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலும்; மனித உடல் அமைப்பும் ஒரு பார்வை…! #ArudraDarshan

Read Time:3 Minute, 47 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது.

ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும். மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

நடராஜப்பெருமான் சிதம்பரம் திருத்தலத்தில் ஆகாய வெளியாக இருப்பதையே ‘சிதம்பர ரகசியம்’ எனப் பெரியோர்கள் கூறி உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் நம்மை வியப்படைய செய்கின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.


சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் இடமானது, பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என்று கூறப்படுகிறது.


மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலின் 9 நுழைவு வாசல்களும், மனித உடலில் இருக்கும் நவதுவாரங்களை குறிக்கின்றது.


கோவில் விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டு உள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது.

21,600 தகடுகளை வேய, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72 ஆயிரம் என்ற எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கிறது. இதில் கண்ணுக்கு தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.


பொன்னம்பலம் சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டு உள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். அந்த இடத்தை அடைய 5 படிகள் ஏற வேண்டும். இந்த படிகளை பஞ்சாட்சரப்படி என்று அழைக்கப்படுகிறது.
அதாவது ‘சி,வா,ய,ந,ம’ என்ற ஐந்து எழுத்தே அது. இறைவன் இதயக் கமலத்தில் இடம் பெற ஐந்தெழுத்து மந்திரமே ஒரேவழி என்பதனை உணர்த்துவதாக இது உள்ளது.


கனகசபை பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. அது 4 வேதங்களை குறிக்கின்றது.


பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளை கொண்டு உள்ளது. இது 64 கலைகளை குறிப்பதாக சொல்கிறார்கள்.


பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கிறது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கிறது.