கன்னியாகுமரி எஸ்.ஐ.சுட்டுக்கொலை: தேசிய புலனாய்வு பிரிவு தேடும் நபர்கள் மீது சந்தேகம்…

Read Time:3 Minute, 23 Second

கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை சோதனை சாவடி உள்ளது. இங்கு இரு மாநில எல்லை வழியாக செல்லும் வாகனங்களை சோதனையிட்டு அனுமதி வழங்கப்படும். இந்த சோதனை சாவடியில் நேற்று இரவு (ஜனவரி 8) பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 55) கொலை செய்யப்பட்டார். இரவு 9.40 மணி அளவில் சோதனை சாவடி அருகே காரில்வந்து இறங்கிய மர்மநபர்கள், சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத வில்சனின் மார்பு, கழுத்து, வலது தொடை ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்தது.

இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்து இறந்தார். வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள், தாங்கள் வந்த காரிலேயே தப்பி விட்டனர். துப்பாக்கியால் சுட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி பதிவுகளில் அவரை சுட்டுக்கொன்ற இளைஞர்கள் வேகமாக ஓடுவதும், பின்னர் மற்றொரு இடத்தில் சிரித்தப்படி பேசிக்கொண்டு செல்வதும் பதிவாகியுள்ளது. முதற்கட்டமாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது. இருமாநில போலீசாரும் விசாரணையை மேற்கொள்கிறார்கள்.

கொலை செய்த கும்பல் யார் ஏதாவது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களா? அவர்கள் ஏன் சோதனைச்சாவடியில் இருக்கும் வயதான உதவி ஆய்வாளரை சுட வேண்டும், சுட்டப்பின்னர் அவர்கள் பேசியபடி நடந்து செல்வதும், காரை ஓட்டியவர் தனியாக தப்பிச் சென்றதையும் பார்க்கும்போது இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனிடையே போலீஸார் வெளியிட்டதாக இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன.

இவ்விவகாரத்தில் முக்கிய சந்தேகநபர்கள் கன்னியாகுமரியை சேர்ந்த இருவர், அவர்கள் அப்துல் ஷமீம் (வயது 25) மற்றும் தவ்பீக் யூசுப் (வயது 27). இவர்களுக்கு ஏதேனும் குழுக்களுடன் தொடர்பு உள்ளதா? என்பது தெரியவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் தேசிய புலனாய்வு பிரிவால் தேடப்படுபவர்கள் என்று தமிழக காவல்துறை உறுதி செய்துள்ளது என தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. சந்தேக நபர்கள் 2 பேருக்கு எதிராக கேரள மாநில போலிசும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கேரள மாநில போலீசும் தேடுதல் வேட்டையை மேற்கொள்கிறது. இருமாநில போலீசாரும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.