இந்தியா முழுவதும் பயங்கரவாதிகள் கைது, பாதுகாப்பு படைகள் அதிரடி

Read Time:6 Minute, 37 Second

தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்த கடலூரை சேர்ந்த ஐ.எஸ். ஆதரவாளர், குஜராத்தில் பயங்கரவாத தடுப்பு படையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஐ.எஸ். அமைப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இணைந்தனர். இதைப்போல பல நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இந்த இயக்கத்துக்கு ஆதரவாக தங்கள் நாடுகளில் அமைப்புகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவிலும் ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இங்கு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டு வரும் அவர்களை பயங்கரவாத தடுப்பு படையினர், தேசிய புலனாய்வுப்பிரிவினர் என உயர் பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாபர் அலி என்பவர் ஐ.எஸ். இயக்க ஆதரவாளராக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. இங்கு நடந்த முக்கியமான கொலை வழக்கில் சிக்கிய ஜாபர் அலி உள்ளிட்ட 6 பேர் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடினர். இந்த வழக்கில் அவர்களை தமிழக போலீசார் தேடி வந்தனர். ஜாபர் அலி மீது டெல்லி போலீசிலும் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. எனவே டெல்லி சிறப்பு போலீசாரும் ஜாபர் அலியை தேடி வந்தனர்.

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்ற இவர்கள், பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி வருவதாக புலனாய்வுத்துறையினரால் பயங்கரவாத தடுப்பு படையினருக்கு (ஏ.டி.எஸ்.) தகவல் கொடுக்கப்பட்டது. பொது அமைதிக்கு பயங்கர அச்சுறுத்தலாக விளங்கி வரும் அவர்களை பிடிக்க ஏ.டி.எஸ். அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இதன் பலனாக குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு படையினரிடம் ஜாபர் அலி நேற்று சிக்கினார்.

வதோதரா நகருக்கு அருகே உள்ள கார்வா பகுதியில் வைத்து ஜாபர் அலியை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொழில்நுட்ப ரீதியான கண்காணிப்பு மற்றும் உளவாளிகள் மூலம் ஜாபர் அலியை மடக்கியதாக ஏ.டி.எஸ். அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத்தில் ஐ.எஸ். அமைப்பின் கிளையை நிறுவுவதற்கு அவர் திட்டமிட்டு இருந்ததாகவும் அவர்கள் கூறினர். ஜாபர் அலி மீது டெல்லி போலீசில் வழக்கு இருப்பதால், அவர் டெல்லி போலீசாரிடம் விரைவில் ஒப்படைக்கப்படுவார் என குஜராத் ஏ.டி.எஸ். அதிகாரிகள் கூறினர்.

பெங்களூருவில் கைது

சென்னை அம்பத்தூரில் 2014-ம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம் மற்றும் கடலூரைச் சேர்ந்த காஜாமுகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்த அவர்கள் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டனர். இதனால் அவர்களை தமிழக கியூ பிரிவு போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், அவர்கள் மூவரும் பெங்களூருவை சேர்ந்த சிலருடன் சேர்ந்து பயங்கர சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், மேற்கண்ட 3 பேருக்கும் உதவி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த முகமது ஹனீப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய மூவரை தமிழக கியூ பிரிவு போலீசார் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 பேர் பற்றியும் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்த பெங்களூருவில் தனி அமைப்பு தொடங்கி செயல்பட்டுள்ளனர். இவர்களில் முகமது சையத் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவர் இதற்காக கம்ப்யூட்டரில் தனி சாப்ட்வேர் வடிவமைத்துள்ளார். இவர்கள் மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த விசாரணையின்போது இவர்களை பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் 3 பேர் கைது

டெல்லி போலீஸ் சிறப்பு படையினர் குடியரசு தின விழாவையொட்டி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி வாசிராபாத் பகுதியில் சந்தேகத்துக்கிடமான சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றனர். அப்போது போலீசாரை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் திருப்பி சுட்டனர். பின்னர் அங்கு இருந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் காஜா மொய்தீன் (வயது 52), அப்துல் சமது (28), சையத் அலி நவாஸ் (32) என்றும், அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்கள் டெல்லி அல்லது உத்தரபிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.