குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது

Read Time:2 Minute, 7 Second

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்பங்களை சந்தித்து இந்தியா வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் விதமாக மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் கடந்த டிசம்பர் 11-ந்தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது இதுவே முதல் முறை என்றும், இது அரசியல்சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது என்றும் எதிர்ப்பாளர்கள் கூறிவருகிறார்கள். ஆனாலும் மத்திய அரசும், பா.ஜனதாவும் அந்த 3 நாடுகளிலும் சிறுபான்மையினராக இருக்கும் இவர்கள் மதரீதியாக துன்புறுத்தப்பட்டதால் வேறு வழியின்றி இந்தியாவுக்கு வந்து உள்ளனர். அதனால்தான் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது என்று காரணம் கூறிவருகிறது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம்-2019 ஜனவரி 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், உள்துறை அமைச்சகம் இந்த சட்டத்துக்கான விதிகளை இன்னும் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.